பாதுகாப்பு அமைச்சகம்
அதிநவீன கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த உயர்நிலை தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுமாறு விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் வலியுறுத்தல்
Posted On:
19 DEC 2024 1:17PM by PIB Chennai
செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற உயர்நிலை தொழில்நுட்பங்களில், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் மாறிவரும் காலத்திற்கேற்ப ஆழமான திறனைப் பெற வேண்டும். உயர்நிலையிலான அதி நவீன கண்டுபிடிப்புகளில்இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இதனை அவர்கள் மேற்கொள் வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார். டிசம்பர் 19 அன்று தில்லி ஐஐடியில் இந்திய தேசிய பொறியியல் அகாடமியின் ஆண்டு மாநாட்டின் தொடக்க அமர்வில் அவர் உரையாற்றினார்.
இந்த முக்கிய தொழில்நுட்பங்கள் வரும் காலங்களில் அனைத்து துறைகளிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார். “இப்போது, நாம் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். இந்தத் தொழில்நுட்பங்களின் மீதான ஆதிக்கத்தை முதலில் பெறுவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில், மக்களின் உடனடி அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும்,”என்று அவர் மேலும் கூறினார்.
உலகம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதாகவும், பாதுகாப்புத் துறை இந்த மாற்றத்தின் தாக்கத்துக்கு உட்படாமல் இருக்க முடியாது என்றும் திரு ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார். முன்னதாக, சில காரணங்களால், நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா பின்தங்கியிருந்தது, ஆனால் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, நாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, தற்சார்பை நோக்கி நகர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
"நவீன போர்முறைகள் வேகமாக மாறி வருகின்றன, எனவே உயர்நிலை தொழில்நுட்பத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இதை நோக்கி, இளைஞர்களின் திறமையை வெளிக்கொணர புதுமைகளுக்கான பாதுகாப்புத்துறை தனிச் சிறப்பு திறன் (iDEX) மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியம் போன்ற திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், ”என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறினார். பொது மற்றும் தனியார் துறைகள், கல்வியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சிகளே இந்தப் புரட்சிகரமான மாற்றத்துக்கு காரணம் என்று அவர் பாராட்டினார். உலக அரங்கில் நாடு விரைவில் ஒரு வலிமையான தொழில்நுட்ப அனுகூலங்களை அடையும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் , பாதுகாப்புத் துறைகளால் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் பார்வையிட்டார், இதில் பாதுகாப்பு-தொழில்-கல்வித்துறை ஒத்துழைப்பு மூலம் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுஇருந்தன. தில்லி ஐஐடியின் முதுநிலை மாணவர்கள் மற்றும் பிஎச்டி ஆராய்ச்சியாளர்கள் வழங்கிய போஸ்டர் அமர்வையும் அவர் பாராட்டினார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறையின் செயலாளரும் டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத்; ஐஎன்ஏஇ தலைவர் பேராசிரியர் இந்திரனில் மன்னா; தில்லி ஐஐடி இயக்குனர், பேராசிரியர் ரங்கன் பானர்ஜி உள்பட பல்வேறு தொழில்துறை பிரதிநிதிகள், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மூன்று நாள் மாநாட்டில் சுமார் 400 பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085947
***
(Release ID: 2085947)
TS/PKV/RR
(Release ID: 2085984)
Visitor Counter : 14