பாதுகாப்பு அமைச்சகம்
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புதிய முயற்சிகளை ஆராய 9-வது இந்திய-தாய்லாந்து பாதுகாப்புத் துறை பேச்சுவார்த்தை புதுதில்லியில் நடைபெற்றது
Posted On:
12 DEC 2024 7:39PM by PIB Chennai
9-வது இந்தியா-தாய்லாந்து பாதுகாப்புத் துறை பேச்சுவார்த்தை டிசம்பர் 12, 2024 அன்று புதுதில்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு இணைச் செயலாளர் (சர்வதேச ஒத்துழைப்பு) திரு அமிதாப் பிரசாத் மற்றும் தாய்லாந்தின் பாதுகாப்பு துணை நிரந்தர செயலாளர் ஜெனரல் தாராபோங் மலகம் ஆகியோர் கூட்டாகத் தலைமை தாங்கினர்.
பாதுகாப்புத் தொழில்துறைகளில் ஒத்துழைப்பை திறம்பட வழிநடத்தவும், கண்காணிக்கவும் கூட்டு பணிக்குழுவை விரைவில் அமைக்க இருதரப்பும் ஒப்புக் கொண்டன. முக்கிய துறைகளில் வழக்கமான ஈடுபாட்டை முன்னெடுத்துச் செல்லவும், நிறுவனமயமாக்கவும் இந்திய மற்றும் தாய்லாந்து ஆயுதப்படைகளுக்கு இடையே துறை வல்லுநர்கள் பரிமாற்றத்தை நடத்தவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
ராயல் தாய் ஆயுதப் படைகளுடன் அதன் பாதுகாப்பு கையகப்படுத்தல் திட்டங்களில் ஒத்துழைக்கும் திறனுடன் உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் திறனை இந்திய இணைத் தலைவர் எடுத்துரைத்தார். இந்திய பாதுகாப்புத் தொழில் சூழலின் திறனை தாய்லாந்து பாராட்டியதுடன், பாதுகாப்புத் தொழில் துறையில் கூட்டு வடிவமைப்பு, கூட்டு உற்பத்தி மற்றும் கூட்டு மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை ஆராயவும் முன்மொழிந்தது.
தாய்லாந்துடனான பாதுகாப்பு உறவுகளை தீவிரப்படுத்துவதில் இந்த பேச்சுவார்த்தை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். தாய்லாந்து ஒரு கடல்சார் அண்டை நாடு மற்றும் இந்தியாவின் 'கிழக்கு நோக்கிய கொள்கை' மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மதிப்புமிக்க கூட்டாளியாக உள்ளது. தாய்லாந்தின் 'மேற்கு நோக்கிய செயல்' கொள்கை, இந்தியாவின் 'கிழக்கு நோக்கிய செயல்' கொள்கையை பாராட்டி, இருதரப்பு உறவுகளை கணிசமாக உயர்த்துவதற்கான அடிப்படையை வழங்குகிறது.
முன்னதாக, துணை நிரந்தர செயலாளர், புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தாய்லாந்து தூதுக்குழுவினர், தேசிய அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டு, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தரின் புனித நினைவுச் சின்னங்களுக்கு மரியாதை செலுத்தினர்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, தாய்லாந்து தூதுக்குழு, டி.ஆர்.டி.ஓ தலைமையகத்திற்கு வருகை தந்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் கூட்டு உற்பத்தியில் ஒத்துழைப்பு மூலம் பாதுகாப்பு தொழில்துறை திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கும்.
***
(Release ID: 2083914)
AD/BR/RR
(Release ID: 2084083)
Visitor Counter : 43