குடியரசுத் தலைவர் செயலகம்
பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தேசிய விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்
Posted On:
11 DEC 2024 6:58PM by PIB Chennai
நீடித்த மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி குறித்த கருப்பொருளில் சிறப்பாக செயலாற்றிய பஞ்சாயத்து அமைப்புகளை அங்கீகரிக்கும் வகையில், பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தேசிய விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு புதுதில்லியில் இன்று (11.12.2024) வழங்கினார். பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 விருதாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், நாட்டின் மக்கள் தொகையில் 64 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசித்து வருவதாக கூறினார். எனவே, வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை கிராமப்புறங்களின் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது என்று கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரமளிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.
தற்சார்பு, நிர்வாகத்திறன் கொண்ட உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படையில்தான் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைக்க முடியும் என்று குடியரசுத்தலைவர் நம்பிக்கை தெரிவித்தார். பஞ்சாயத்து அமைப்புகள் தங்களது வருவாய் ஆதாரங்களை மேம்படுத்துவதன் மூலம் தற்சார்பு அடைய முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தற்சார்பு நிலை கிராம சபைகளுக்கு தன்னம்பிக்கையையும், நாட்டிற்கு வலிமையையும் சேர்க்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தேசிய விருதுகள் பெற்ற அனைவருக்கும் குடியரசுத்தலைவர் வாழ்த்து தெரிவித்தார். இந்த விருது அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சிகளுக்கு சான்றாகும் என்று அவர் கூறினார். இந்தக் கௌரவம் அவர்களை மேலும் சிறப்பாக பணியாற்ற ஊக்குவிக்கும் என்றும், கிராமப்புற மேம்பாட்டிற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள பிற கிராம பஞ்சாயத்து அமைப்புகளுக்கும் இது உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் அரசியல் ரீதியாக பெண்களுக்கு அதிகாரம் அளித்து வருவதாக குடியரசுத் தலைவர் கூறினார்.
மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளை பொறுப்புள்ளவர்களாக மாற்றுவதும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் நோக்கம் என்று குடியரசுத்தலைவர் கூறினார். வாக்காளர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அவர் கூறினார். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் நடத்தை மற்றும் செயல்களின் மூலம் இந்த நம்பிக்கையைப் பராமரிப்பது அவர்களின் கடமையாகும்.
பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தேசிய விருதுகள் – 2024 வறுமை ஒழிப்பு, சுகாதாரம், குழந்தைகள் நலன், நீர் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, சமூக நீதி, நிர்வாகத்திறன், பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகிய அம்சங்களை பஞ்சாயத்து அமைப்புகளின் செயல் திறனை அங்கீகரித்து ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
----
SV/KPG/DL
(Release ID: 2083524)
Visitor Counter : 19