உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருள் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகள்

Posted On: 11 DEC 2024 4:08PM by PIB Chennai

போதைப்பொருள்கள் - மனநிலை மயக்கப் பொருட்கள் சட்டம்-1985 என்பது போதைப் பொருள்களைத் தடுக்கவும், இந்தப் பொருள்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரைக் கைது செய்யவும் இயற்றப்பட்டது. 

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவற்றில் சில: -

(i) இந்தியாவில் போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் மத்திய - மாநில மருந்து சட்ட அமலாக்க முகமைகள், இதர அமைப்புகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக 4 அடுக்கு போதைப் பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் (NCORD) நிறுவப்பட்டுள்ளது.

(ii) ஒவ்வொரு மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் கூடுதல் தலைமை இயக்குநர் / இன்ஸ்பெக்டர் ஜெனரல் அளவிலான காவல்துறை அதிகாரி தலைமையில் பிரத்யேக போதைப்பொருள் தடுப்பு பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

(iii) முக்கியமான, குறிப்பிடத்தக்க போதைப் பொருள் கைப்பற்றல்கள் குறித்த புலனாய்வைக் கண்காணிக்க, போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைமை இயக்குநர் தலைமையில் கூட்டு ஒருங்கிணைப்புக் குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

(iv) எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு (எல்லைப் பாதுகாப்புப் படை, அசாம் ரைபிள்ஸ், சஷஸ்திர சீமா பால்) போதை பொருட்கள் (NDPS) சட்டம்-1985-ன் கீழ் சர்வதேச எல்லையில் போதைப் பொருள் பறிமுதலுக்கும் கைது நடவடிக்கைக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

(v) போதைப் பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த கடற்படை, கடலோரக் காவல்படை, எல்லைப் பாதுகாப்புப் படை, மாநில போதைப் பொருள் தடுப்புப் படைகள் போன்ற பிற முகமைகளுடன் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு ஒருங்கிணைந்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

(vi) போதைப்பொருள் தடுப்பு வாரியம், அமலாக்க முகமைகளின் அதிகாரிகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறது.

(vii) பல்நோக்கு முகமை மைய (MAC) அமைப்பின் கீழ் டார்க்நெட், கிரிப்டோ கரன்சிக்கான பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

(viii) போதைப் பொருள் தடுப்பு வாரியமான என்சிபி-ஐ வலுப்படுத்தவும், அதன் நாடு தழுவிய இருப்பை அதிகரிக்கவும், பல்வேறு நிலைகளில் 536 பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

(ix) மாநிலங்களில் தற்போதுள்ள தடய அறிவியல் ஆய்வகங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களின் கீழ் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது.

(x) போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சர்வதேச தாக்கங்கள், கடல்சார் கடத்தல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண அண்டை நாடுகளான மியான்மர், ஈரான், வங்கதேசம், இந்தோனேசியா, சிங்கப்பூர், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுடன் போதைப்பொருள் தடுப்பு வாரியத்தின் தலைமை இயக்குநர் நிலையிலான பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.

----

AD/PLM/KPG/DL


(Release ID: 2083514) Visitor Counter : 33


Read this release in: English , Hindi , Manipuri