தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

விஞ்ஞான் பவனில் நாளை மனித உரிமைகள் தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்பு

Posted On: 09 DEC 2024 11:41AM by PIB Chennai

1948-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம்தேதி மனித உரிமைகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் உலகளாவிய அளவுகோலாக, மனித உரிமைப் பிரகடனம் செயல்படுகிறது. மனித உரிமைகள் தினத்தை உலகெங்கிலும் உள்ள பல்வேறு பங்குதாரர்கள் தங்கள் செயல்கள் மற்றும் பொறுப்புகளை பிரதிபலிப்பதற்கான வாய்ப்பாக இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கருதுகிறது. இதன் மூலம் மனித உரிமை மீறல்கள் செயல்பாடுகள்  குறையும்.

உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம், அனைத்து மனிதர்களும் சுதந்திரமாகவும் சமமாகவும் பிறக்கிறார்கள் என்று கூறுவதோடு வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு, சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் சிந்தனை, மனசாட்சி, மதம், கருத்து மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இந்தப் பிரகடனக் கொள்கை இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1993 ஆகிய இரண்டிலும் பிரதிபலிக்கிறது. இது அக்டோபர் 12, 1993 அன்று இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை நிறுவுவதற்கான சட்ட கட்டமைப்பையும் வழங்கியது.

மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 அன்று, தேசிய மனித உரிமைகள் ஆணையம் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தலைமை விருந்தினராக இதில் கலந்து கொள்கிறார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செயல் தலைவர் திருமதி விஜயபாரதி சயானி, பொதுச் செயலாளர் திரு பாரத் லால் மற்றும் மூத்த அதிகாரிகள், சட்டரீதியான ஆணையங்கள், மாநில மனித உரிமைகள் ஆணையங்கள், தூதர்கள், சிவில் சமூகம் மற்றும் பிற பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து, 'மனநலம்: வகுப்பறையிலிருந்து பணியிடம்வரை மனஅழுத்தத்தை தடம் அறிதல்' என்ற தேசிய மாநாடு நடைபெறும். மூன்று அமர்வுகளில் 'குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே மன அழுத்தம்', 'உயர்கல்வி நிறுவனங்களில் மனநல சவால்கள்' மற்றும் 'பணியிடங்களில் மன அழுத்தம் மற்றும் சோர்வு' ஆகிய தலைப்புகளில் நடைபெறும். கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் மன அழுத்தத்தின் உளவியல் தாக்கங்களை ஆராய்வதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டின் மனித உரிமைகள் தினத்தின் கருப்பொருள் "நமது உரிமைகள், நமது எதிர்காலம்” என்பதாகும் .மனித உரிமைகள் என்பது வெறும் விருப்பங்கள் மட்டுமல்ல, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான ஒரு நடைமுறை கருவியும் கூட என்பதை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மற்றும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் இரண்டினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக ஆணையம் பணியாற்றி வந்துள்ளது. அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் மனித உரிமைகளை மையமாகக் கொண்ட அணுகுமுறையை பிரதான நீரோட்டத்தில் இணைப்பதற்கும், பல்வேறு முயற்சிகள் மூலம் பொது அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகம் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளது. இது தேசிய மற்றும் சர்வதேச மன்றங்களில் மனித உரிமைகள் பற்றிய விவாதங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சிவில் சமூகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், நிபுணர்கள், நியதிச்சட்ட ஆணைய உறுப்பினர்கள், மாநில மனித உரிமைகள் ஆணையங்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் உரையாடலில் ஈடுபடுகிறது.

இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் 1993 அக்டோபர் 12 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து 2024 நவம்பர் 30 வரை பல கள விசாரணைகள், வெளிப்படையான விசாரணைகள் மற்றும் முகாம் அமர்வுகளை நடத்தியுள்ளது. சுமார் முப்பதாண்டு காலகட்டத்தில்  23,14,794 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 23,07,587 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. 2,880 வழக்குகள் தாமாக முன்வந்து விசாரணை செய்யப்பட்டு, மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.256.57 லட்சம் நிதி உதவியாக பரிந்துரை செய்துள்ளது.

கடந்த ஓராண்டில், அதாவது 1டிசம்பர், 2023 முதல் 30நவம்பர், 2024 வரை, இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் 65,973 வழக்குகளைப் பதிவு செய்து, முந்தைய ஆண்டுகளின் வழக்குகளையும் சேர்த்து 66,378 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளது. கடந்தஆண்டு இதே காலகட்டத்தில் 109 வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு, மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.17,24,40,000/- பண நிவாரணம் வழங்க பரிந்துரை செய்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமை நிலைமைகளை மதிப்பிடுவதற்காக தேசிய மனித உரிமை ஆணையம் 14 சிறப்பு அறிக்கையாளர்களை நியமித்துள்ளது. இந்த அறிக்கையாளர்கள் புகலிடங்கள், சிறைச்சாலைகள் மற்றும் அதையொத்த நிறுவனங்களுக்கு விஜயம் செய்வதுடன், எதிர்கால நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளுடன் அறிக்கைகளைத் தயாரிக்கின்றனர். கூடுதலாக, 21 சிறப்பு கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்ட மனித உரிமைகள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி தங்கள் கண்டுபிடிப்புகளை ஆணைக்குழுவிற்கு அறிக்கையிடுகின்றனர்.

மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மத்திய மற்றும் மாநில அரசுகள், துணை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களுடன் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறது. இந்த ஆண்டு, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் உட்பட அகில இந்திய சேவை அதிகாரிகளை மனித உரிமைகள் குறித்த ஆழமான புரிதலுடன் சித்தப்படுத்துவதற்கும், அந்தந்த நிறுவனங்களுக்குள் இந்த அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஆணையம் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியது.

ஆணைக்குழு சுமார் 55 கூட்டுப் பயிலரங்குகள், 06 விவாத நீதிமன்ற போட்டிகள் மற்றும் பல பயிற்சிகளை ஏற்பாடு செய்தது, இது நாடு முழுவதிலுமிருந்து மாணவர்களுக்கு பயனளிக்கிறது. 44 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மனித உரிமைகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த நோக்குநிலைக்காக ஆணைக்குழுவை பார்வையிட்டனர். கூடுதலாக, இது மத்திய துணை இராணுவப் படைகள் மற்றும் மாநில காவல்துறை அமைப்புகளுக்கு மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விவாதங்களை நடத்தியது.

பணியிடங்களில் பெண்கள் துன்புறுத்தப்படுவதை நிவர்த்தி செய்ய விளையாட்டு அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்புதல், வீடற்ற நபர்களுக்கு இலவச வீட்டுவசதி பரிந்துரைத்தல், வகுப்புவாத கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் இயற்கை பேரழிவுகளால் இடம்பெயர்ந்த நபர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல் உள்ளிட்ட பல வழக்குகளில் மனித உரிமை ஆணையம் தலையிட்டுள்ளது. கடனில் மூழ்கிய விவசாயிகளின் தற்கொலை சம்பவங்களிலும் அது தலையிட்டுள்ளதுடன், ஹான்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டும் 97 சட்டங்களில் திருத்தங்களை பரிந்துரைத்துள்ளது.

ஆணையம் ஹெச்.ஆர்.சி நெட் போர்ட்டல் மூலம் அதன் எல்லையை விரிவுபடுத்தியுள்ளது, இது மாநில ஆணையங்களுடன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் தனிநபர்கள் ஆன்லைனில் புகார்களை பதிவு செய்யவும் நிகழ்நேரத்தில் தங்களின் விண்ணப்ப நிலையை தடம் அறிந்து கொள்வதாகவும்  அனுமதிக்கிறது. இந்தத் தளத்தில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பொது சேவை மையங்கள் மற்றும் தேசிய அரசு சேவைகள்  இணைக்கப்பட்டுள்ளன.

***

(Release ID: 2082238)
TS/PKV/RR/KR


(Release ID: 2082333) Visitor Counter : 49