பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார்
Posted On:
08 DEC 2024 7:02PM by PIB Chennai
திஷா எனப்படும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு - கண்காணிப்புக் குழு ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் இன்று (08.12.2024) நடைபெற்றது. மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் இக்கூட்டத்திற்கு மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் டாக்டர் ஜிதேந்திர சிங், மாவட்ட நிர்வாகம், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய நிதியுதவி திட்டங்களை (CSS) செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்தார். பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், பிரதமரின் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம், சமக்ரா சிக்ஷா உள்ளிட்ட திட்டங்களை அப்பகுதியில் செயல்படுத்துவது குறித்து மத்திய இணையமைச்சருக்கு விரிவான விளக்கம் வழங்கப்பட்டது. இந்தக் கூட்டத்தின்போது, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர், அத்தியாவசிய சேவைகள் வழங்குதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்றவை மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது என்றார். மக்களின் சிக்கல்களைக் குறைக்கும் நோக்கில் அரசு சேவைகள், வசதிகளை திறம்பட வழங்குவதை சம்பந்தப்பட்ட துறைகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்யவும், மக்களின் திருப்தி நிலையை மேம்படுத்தவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
***
PLM /DL
(Release ID: 2082194)
Visitor Counter : 26