கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
ஹிந்தி மொழியை உலக மொழியாக மாற்றும் வகையில், அந்த மொழியின் தூதர்களாக இளைஞர்கள் செயல்பட வேண்டும் ; சென்னையில் தென்னிந்திய ஹிந்தி பிரச்சார சபையின் பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் வலியுறுத்தல்
Posted On:
07 DEC 2024 7:09PM by PIB Chennai
ஹிந்தி மொழியை உலக மொழியாக மாற்றும் வகையில், அந்த மொழியின் தூதர்களாக இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் கூறியுள்ளார்.
சென்னையிலுள்ள தென்னிந்திய ஹிந்தி பிரச்சார சபையின் 83-வது பட்டமளிப்பு விழா அங்குள்ள மகாத்மா காந்தி பட்டமளிப்பு அரங்கில் இன்று நடைபெற்றது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் இதில் கலந்துகொண்டு, தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்ததுடன், பட்டமளிப்பு விழா பேருரையும் ஆற்றினார்.
விழாவில் உரையாற்றிய அவர், ‘’ ஹிந்தி மொழியில் ஒரு பெரும் சக்தி உள்ளது. ஹிந்தி உலக மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. உலக அளவில் அந்த மொழிக்கு ரசிகர்கள் உள்ளனர். இந்த மொழியில் ஒரு மனித நேயம் உள்ளது. அனைத்து இந்திய மொழிகளும், பாரதமாதாவின் காலடியில் பிறந்துள்ளன. அவை அனைத்தும் ஒன்றே. அவை தேசபக்தி மற்றும் மனித நேயத்தின் அடையாளங்களாகும் என்ற செய்தியை உலகுக்கு கொண்டு செல்ல வேண்டும்’ என்று கூறினார்.
இங்கு ஹிந்தி மொழியில் பட்டம்பெற்றுள்ள இளைஞர்கள் இந்த மொழியை உலக மொழியாக மாற்றும் வகையில் அதன் தூதர்களாகச் செயல்பட வேண்டும் என்று அவர்கேட்டுக் கொண்டார். ஹிந்தியை ஒரு நோக்கத்துடனும்,அர்ப்பணிப்புடனும் உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும். மனித குல நன்மைக்காவும், இம் மொழியின் பெருமைகளை, உலகில் எங்கு சென்றாலும், பரப்புவதில் இளைஞர்கள் ஈடுபடவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் மொழிகள் அதன் வலிமை என்பதையும், இந்தியாவின் பல மொழிகளும் நம்மை எப்படி ஒரே பாரதம் உன்னத பாரதம் என்று இணைக்கின்றன என்பதையும் நாம் உலக மக்களிடம் விளக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தியா மிக வேகமாக வளர்ந்துவருகிறது என்று கூறிய அமைச்சர்,விரைவில் அது உலகின் மிக வலிமையான நாடுகளில் ஒன்றாக மாறும் என்று தெரிவித்தார். மகாத்மா காந்தியின் அன்பு, ஆசி ஆகியவை, நாம் ஹிந்தியை உலக மொழியாகவும், உலகத்திற்கான மொழியாகவும் பரப்புவதற்கான நமது முயற்சிக்கு வலு சேர்க்கும் என்று திரு சர்பானந்த சோனோவால் கூறினார்.
விழாவுக்கு தென்னிந்திய ஹிந்தி பிரச்சார சபையின் தலைவர் திரு வி.முரளிதரன் தலைமையேற்று, தலைமை விருந்தினருக்கு நினைவு பரிசுகள் வழங்கி சிறப்பு செய்தார்.
இந்த விழாவில், பிரவீன், விஷாரத் ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்ற சுமார் 8,000 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். தென்னிந்திய ஹிந்தி பிரச்சார சபை நடத்திய தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றுத் தேர்வான சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
இதுதவிர, தென்னிந்திய மாநிலங்களில் ஹிந்தி மொழியைப் பரப்பி தொண்டாற்றிய சென்னையைச் சேர்ந்த 5 மூத்த ஹிந்தி பிரச்சாரகர்களும், தேசப்பிதா மகாத்மா காந்தியின் விருப்பப்படி, தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் ஹிந்தி மொழியைப் பரப்பும் சேவையில் ஈடுபட்ட நான்கு சாகித்யகாரர்களும் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
தென்னிந்திய ஹிந்தி பிரச்சார சபையின் பல்கலைக்கழக பிரிவு நடத்திய எம்ஏ, எம்.பில், பிஎச்டி, பிஇடி, மொழிபெயர்ப்பில் முதுநிலை பட்டயம் பெற்றவர்களில் முதலிடங்களைப் பிடித்த முதுநிலை மாணவர்களும் பாராட்டப்பட்டனர்.
***
SG/PKV/DL
(Release ID: 2081992)
Visitor Counter : 35