சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
நாடாளுமன்ற கேள்வி: மூத்த குடிமக்கள் நலன்
Posted On:
03 DEC 2024 2:07PM by PIB Chennai
மூத்த குடிமக்களுக்கு உதவி மற்றும் பாதுகாப்பு வழங்குவதற்காக அடல் மூத்த குடிமக்கள் மேம்பாட்டுத் திட்டம் (AVYAY) என்ற திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், செயல்படுத்துகிறது. இத்திட்டம் கீழ்க்கண்ட ஏழு கூறுகளைக் கொண்டுள்ளது:
1. ஒருங்கிணைந்த மூத்த குடிமக்களுக்கான திட்டம்: அரசு சாரா / தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கான இல்லங்கள் (முதியோர் இல்லங்கள்), தொடர் பராமரிப்பு இல்லங்கள் போன்றவற்றை நடத்துவதற்கும் பராமரிப்பதற்கும் மானியம் வழங்கப்படுகிறது. ஏழ்மை நிலையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உறைவிடம், ஊட்டச்சத்து, மருத்துவ சேவை மற்றும் பொழுதுபோக்கு போன்ற வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
2. மூத்த குடிமக்களுக்கான மாநில செயல் திட்டம்: மூத்த குடிமக்களுக்கான மாநில செயல் திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்களின் நலனுக்கான செயல் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்துகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உணர்திறன், கண்புரை அறுவை சிகிச்சை போன்ற நடவடிக்கைகளுக்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.
3. கட்டணமில்லா தொலைபேசி எண்: மூத்த குடிமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யவும், மத்திய மற்றும் மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் சட்டம், திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 'எல்டர்லைன்' என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவை 01.10.2021 அன்று தொடங்கப்பட்டது. இதற்கென 14567 என்ற தொலைபேசி எண் தேசிய தொலைபேசி எண்ணாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4. மூத்தகுடிமக்களுக்கான தேசிய வாழ்வியல் உதவித் திட்டம் (RVY): மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 'ராஷ்ட்ரிய வயோஷ் யோஜனா (RVY)' எனப்படும் மூத்தகுடிமக்களுக்கான தேசிய வாழ்வியல் உதவித் திட்டம், மாத வருமானம் 15000/- ரூபாய்க்கு மிகாமல், வயது தொடர்பான குறைபாடுகள் / குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கு, அவர்களின் உடல் செயல்பாடுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வரக்கூடிய உதவி, வாழ்வியல் சாதனங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் 01.04.2017 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டம், 'செயற்கை அவயங்கள் உற்பத்தி நிறுவனத்தின் (அலிம்கோ)' (M/oSJE) கீழ் செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனம்) மூலம் செயல்படுத்தப்படுகிறது.
5. மூத்தகுடிமக்கள் பராமரிப்பு மேம்பாடு (SAGE)-SAGE மூத்தகுடிமக்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதுமையான தீர்வுகளை ஊக்குவிப்பதாகும். இத்திட்டத்தின் கீழ் முதியோர் நலனுக்கான தயாரிப்புகள், செயல்முறைகள் மற்றும் சேவைகளை உருவாக்குவதற்காக புத்தொழில் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு, ஊக்குவிக்கப்படுகின்றன. வெளிப்படையான செயல்முறை மூலம் புத்தொழில் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, நிறுவனத்தின் மொத்த பங்கில் 49% க்கு மிகாமல் அரசின் முதலீட்டிற்கு உட்பட்டு, நிதி பங்குகளாக வழங்கப்படுகிறது.
6. மூப்பியல் கவனிப்பாளர்களுக்கான பயிற்சி - இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், மூப்பியல் கவனிப்பாளர்களின் பராமரிப்பில் அதிகரித்து வரும் தேவையை நிரப்புவதும், அதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு அதிக தொழில்முறை சேவைகளை வழங்குவதும், மூப்பியல் துறையில் தொழில்முறை கவனிப்பாளர்களை உருவாக்குவதும் ஆகும்.
7. மூத்த குடிமக்களுக்கான இதர முயற்சிகள்: சுகாதாரம் மற்றும் முதுமை சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் , நாடு முழுவதும் பல்வேறு முயற்சிகள் செயல்படுத்தப்படுகின்றன.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் முதியோரின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக 'பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007 (MWPSC Act)' என்ற சட்டத்தை அறிவித்துள்ளது. மாநிலங்களில் உள்ள கீழமை மீதிமன்ற நீதிபதி பதவிக்கு இணையான ஒரு அதிகாரியின் தலைமையில் தீர்ப்பாயங்களை அமைக்க மேற்கண்ட சட்டத்தின் பிரிவு 7 வழிவகை செய்கிறது. இச்சட்டத்தின் பிரிவு 9-ன் கீழ், மூத்த குடிமக்களைப் பராமரிப்பதற்குப் பொறுப்பான மூத்த குடிமக்களின் குழந்தைகள் / உறவினர்களுக்கு எதிராக பராமரிப்புத் தீர்ப்பாயங்கள் ஆணை பிறப்பிக்கலாம். மேலும், மேற்சொன்ன சட்டத்தின் பிரிவு 24 மற்றும் 25ன்படி, மூத்த குடிமக்களை துயரத்தில் ஆழ்த்தும் நோக்கத்துடன் கைவிடுதல் மற்றும் துன்புறுத்துதல், மூன்று மாதங்கள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த விதி வயதான உறவினர்களைப் பராமரிப்பதற்கான குடும்ப உறுப்பினர்களின் சட்டப்பூர்வ கடமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் சாத்தியமான புறக்கணிப்பைத் தடுக்கிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080034
***
TS/SV/DL
(Release ID: 2080228)
Visitor Counter : 25