இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அதிகாரம் அளிக்கும் பயிற்சித் திட்டம்
Posted On:
02 DEC 2024 6:34PM by PIB Chennai
ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அதிகாரமளிக்கும் பயிற்சி திட்டமான ரீசெட் (RESET) என்ற திட்டத்தை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் 29.08.2024 அன்று தொடங்கியுள்ளது. இது ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களின் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உள்ளகப் பயிற்சியுடன் கூடுதலாக அவர்களின் மேம்பாட்டிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பயிற்சித் திட்டத்தை வழங்குகிறது. அத்துடன் பொருத்தமான தொழில் விருப்பத்திற்கு மாறுவதற்கு தேவையான திறன்களை அவர்களுக்கு அளிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. விளையாட்டுத் துறையில் தற்போதுள்ள இடைவெளியை நிவர்த்தி செய்வதையும் இந்த ரீசெட் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
20 முதல் 50 வயதுக்குட்பட்ட, விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெற்ற, சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்றவர்கள் அல்லது தேசிய அளவிலோ, மாநில அளவிலோ பதக்கம் வென்றவர்கள், அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் பங்கேற்றவர்கள் ரீசெட் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயிற்சித் திட்டங்களில் சேர தகுதியுடையவர்கள்.
விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணர், விளையாட்டு நிகழ்வு மேலாண்மை, கார்ப்பரேட் ஆரோக்கிய பயிற்சியாளர், விளையாட்டு தொழில்முனைவோர், உடற்பயிற்சி மைய மேலாளர், உடற்கல்வி பயிற்சியாளர், உடற்பயிற்சி பயிற்சியாளர், யோகா பயிற்சியாளர், தற்காப்பு பயிற்சியாளர், சமூக விளையாட்டு பயிற்சியாளர், முகாம்-மலையேற்ற வழிகாட்டி போன்ற பதினாறு படிப்புகள் அல்லது பயிற்சித் திட்டங்கள் ரீசெட் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
*****
(Release ID: 2079924)
Visitor Counter : 28