இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கேலோ இந்தியா திட்டத்தின் தாக்கம்
Posted On:
02 DEC 2024 6:34PM by PIB Chennai
கேலோ இந்தியா திட்டம் இளம் விளையாட்டுத் திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களது திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள், அளவுகோல்களின் அடிப்படையில் பாரா தடகளம் உட்பட 21 விளையாட்டுகளில் வீரர்களுக்கு ஆதரவளிக்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் 2781 கேலோ இந்தியா தடகள வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பயிற்சி, உபகரணங்கள், மருத்துவ பராமரிப்பு, மாதாந்திர ஆதரவு ஆகியவை வழங்கப்படுகிறது.
இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள பல்வேறு தேசிய சிறப்பு மையங்களும் பிற அங்கீகாரம் பெற்ற அகாடமிகளிலும் பயிற்சி பெறுகின்றனர். இது நாட்டின் விளையாட்டு திறமையாளர்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
சீனாவின் ஹாங்சோவில் நடந்த 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 644 இந்திய விளையாட்டு வீரர்களில் 124 பேர் கேலோ இந்தியா திட்ட வீரர்கள் ஆவார்கள். அப்போட்டியில் இந்தியா வென்ற 106 பதக்கங்களில் 42 பதக்கங்களை கேலோ இந்தியா வீரர்கள் வென்றுள்ளனர். பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பங்கேற்ற 117 இந்திய வீரர்களில், 28 பேர் கேலோ இந்தியா திட்ட வீரர்கள் ஆவார்கள். தேசிய, சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் இந்தியாவின் செயல்திறனை மேம்படுத்துவதில் கேலோ இந்தியா திட்டத்தில் பயிற்சி பெறும் வீரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
*****
(Release ID: 2079922)
Visitor Counter : 27