சுரங்கங்கள் அமைச்சகம்
2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-அக்டோபர்) முக்கிய தாதுக்கள் மற்றும் இரும்பு அல்லாத உலோகங்களின் உற்பத்தியில் வலுவான வளர்ச்சி
Posted On:
28 NOV 2024 4:27PM by PIB Chennai
2023-24 நிதியாண்டில் சாதனை உற்பத்தி அளவை எட்டிய பின்னர், நாட்டில் சில முக்கிய கனிமங்களின் உற்பத்தி 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-அக்டோபர்) தொடர்ந்து வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. மதிப்பின் அடிப்படையில் மொத்த கனிம உற்பத்தியில் இரும்புத் தாது 69% ஆகும். 2023-24 நிதியாண்டில் இரும்புத் தாது உற்பத்தி 274 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) ஆக இருந்தது.
தற்காலிக தரவுகளின்படி, இரும்புத் தாது உற்பத்தி 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-அக்டோபர்) 152.1 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-அக்டோபர்) 158.4 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமான 4.1% வளர்ச்சியைக் காட்டுகிறது. மாங்கனீசு தாது உற்பத்தி 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-அக்டோபர்) 11.1% அதிகரித்து 2.0 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. பாக்சைட் உற்பத்தி 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-அக்டோபர்) 12.4 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-அக்டோபர்) 11.3% அதிகரித்து 13.8 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
இரும்பு அல்லாத உலோகத் துறையில், நிதியாண்டு 2024-25-ல் (ஏப்ரல்-அக்டோபர்) முதன்மை அலுமினிய உற்பத்தி கடந்த ஆண்டு இதே காலகட்டத்தைவிட 1.2% வளர்ச்சியைப் பதிவு செய்தது, நிதியாண்டு 2023-24-ல் (ஏப்ரல்-அக்டோபர்) 24.17 லட்சம் டன்னிலிருந்து நிதியாண்டு 2024-25-ல் (ஏப்ரல்-அக்டோபர்) 24.46 லட்சம் டன்னாக அதிகரித்தது. இதே காலகட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தி 2.83 லட்சம் டன்னிலிருந்து 3.00 லட்சம் டன்னாக 6.0 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியா 2 வது பெரிய அலுமினியம் உற்பத்தியாளராகவும், சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தியில் முதல் 10 இடங்களிலும்,உலகின் நான்காவது பெரிய இரும்புத் தாது உற்பத்தியாளராகவும் உள்ளது. நடப்பு நிதியாண்டில் இரும்புத்தாது உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான வளர்ச்சி இரும்புத் தொழிலான எஃகின் வலுவான தேவை நிலைமைகளை பிரதிபலிக்கிறது. அலுமினியம் மற்றும் தாமிரத்தின் வளர்ச்சியுடன் இணைந்து, இந்த வளர்ச்சிப் போக்குகள் ஆற்றல், உள்கட்டமைப்பு, கட்டுமானம், வாகனம், இயந்திரங்கள் போன்ற பயனர் துறைகளில் தொடர்ச்சியான, வலுவான பொருளாதார நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகின்றன.
***
SMB/RR/DL
(Release ID: 2078766)
Visitor Counter : 5