சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற கேள்வி:- வன பாதுகாப்பு

Posted On: 28 NOV 2024 2:00PM by PIB Chennai

நாட்டில் உள்ள வனங்களின் பரப்பளவை விரிவுபடுத்துவதற்கும், சதுப்புநிலங்கள், ஈரநிலங்களைப் பாதுகாப்பதற்கும் பல்வேறு முயற்சிகளை மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாறுதல் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டங்களின் விவரம் வருமாறு:

1.    மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கூட்டு வன மேலாண்மைக் குழுக்கள் மூலம் வனப்பரப்பை பாதுகாத்தல், மீட்டெடுத்தல், மேம்படுத்துவதை பசுமை இந்தியாவுக்கான தேசிய இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 17  மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்திற்கு தோட்டம் / சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக 944.48 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

2.    நகர்ப்புற வன திட்டம் என்பது நகரங்களில் வனம் / பசுமை பகுதிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமாகும். இது மாநில/யூனியன் பிரதேச வனத் துறைகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 31 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 546 திட்டங்களுக்கு அமைச்சகம் இந்த அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது இத்திட்டத்தின் கீழ் 431.77 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

3.    பள்ளிகளில் செடி வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தி, தாவரங்களின் முக்கியத்துவம் குறித்து அவர்கள் புரிந்து கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செடி வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 19 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 743 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

4.    சதுப்புநிலக் காடுகளை தனித்துவமிக்க, இயற்கை சூழலுடன் கூடிய அமைப்பாக மீட்டெடுப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், கடலோர வாழ்விடங்களின் நிலைத்தன்மையைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கும் "கரையோர வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருவாயின சதுப்புநில முன்முயற்சி" (மிஷ்டி) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கென ஆந்திரா, குஜராத், கேரளா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் 17.96 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

5.    தேசிய கடலோர இயக்கத்தின் கீழ், சதுப்பு நிலக்காடுகள் மற்றும் பவளப்பாறைகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் 9 கடலோர மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு நிதி உதவி அளித்துள்ளது.

6.    மரக்கன்று நடுவதை ஊக்குவிக்கும் வகையில், சர்வதேச வன தினம், உலக சுற்றுச்சூழல் தினம், வன விழா, வன உயிரின வாரம் போன்ற பல்வேறு வகைகளில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாநாடுகள், பட்டறைகள், கையேடுகள், விளம்பர பலகைகள் போன்றவற்றின் மூலம் மரக்கன்று நடுவது, வனப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை தவிர, இது தொடர்புடைய சட்டங்கள் / விதிமுறைகள் / ஒழுங்குமுறைகள் மற்றும் நீதிமன்ற ஆணைகள் ஆகியவற்றை தீவிரமாக அமல்படுத்துவதன் மூலம் வனங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் ஈரநிலங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு. கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2078356)
TS/SV/RR/KR


(Release ID: 2078462) Visitor Counter : 15


Read this release in: English , Urdu , Hindi