வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவும் பிரான்சும் பல்வேறு துறைகளில் கூட்டாக செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

Posted On: 27 NOV 2024 6:22PM by PIB Chennai

பல்வேறு துறைகளில் இந்தியாவும் பிரான்சும் இணைந்தபு செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

புதுதில்லியில் இன்று பிரான்ஸ் வெளிநாட்டு வர்த்தக ஆலோசகர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆசிய பசிபிக் ஆணைய  மன்றக் கூட்டத்தில் மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்றார். உணவு உற்பத்தியில் நிலையான நடைமுறைகளைப் பயன்படுத்துவது பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை தணிக்கும் என்று அவர் கூறினார்.

புதுமையான நீடித்த நடைமுறைகளைப் பயன்படுத்தி உலகின் உணவுப் பாதுகாப்புக்காக வேளாண், உணவு பதப்படுத்துதலை இந்தியாவும் பிரான்ஸும் கூட்டாக விரிவுபடுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து செயல்பட மிகப் பெரிய வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்ட திரு பியூஷ் கோயல், சர்வதேச சூரியசக்தி கூட்டணி அபார வெற்றி அடைந்துள்ளது என்றார். இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து செயல்படும் இந்த கூட்டணியில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

விண்வெளி, விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு, வாகனங்கள், மின்சார வாகனங்கள் போன்ற துறைகளில் இந்தியாவும் பிரான்சும் இணைந்து செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன என்று அவர் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 15 பில்லியன் டாலரை எட்டியது எனவும் இந்திய ஏற்றுமதி 7 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 8 பில்லியன் டாலராகவும் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். பிரான்ஸ் இந்தியாவுக்கான 11-வது பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளராக உள்ளது எனவும் 750-க்கும் மேற்பட்ட பிரான்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன என்றும் திரு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இந்தியாவும் பிரான்ஸும் இந்த ஆண்டு 75 ஆண்டு தூதரக உறவையும், 25 ஆண்டுகால உத்திசார் கூட்டு உறவுகளையும் கொண்டுள்ளன என்று திரு பியூஷ் கோயல் எடுத்துரைத்தார்.

முன்னதாக, பிரதமர் திரு நரேந்திர மோடியின் சிறப்பு செய்தியை திரு பியூஷ் கோயல் வாசித்தார். நம்பிக்கை, பகிர்ந்து கொள்ளப்பட்ட மதிப்புகள், தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையேயான உறவுகள் அமைந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

***

PLM/KPG/DL


(Release ID: 2078204) Visitor Counter : 5


Read this release in: English , Urdu , Hindi