பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
'குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா' இயக்கத்தை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் தொடங்கி வைத்தார்
Posted On:
27 NOV 2024 6:07PM by PIB Chennai
குழந்தை திருமணத்தைத் தடுப்பதிலும், நாடு முழுவதும் உள்ள இளம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, "குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா" என்ற தேசிய இயக்கத்தை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இத் துறையின் இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர், அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.
இயக்கத்தின் ஒரு பகுதியாக, குழந்தை திருமணம் இல்லாத பாரதத்துக்கான போர்ட்டலையும் அமைச்சர் திறந்து வைத்தார். இது ஒரு புதுமையான ஆன்லைன் தளமாகும். இது குடிமக்களுக்கு குழந்தை திருமண சம்பவங்கள் பற்றி புகாரளிக்கவும், புகார்களை தாக்கல் செய்யவும், நாடு முழுவதும் உள்ள குழந்தை திருமண தடுப்பு அதிகாரிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவும் உதவுகிறது. குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், குழந்தைத் திருமண தடைச் சட்டம், 2006-ஐ அமல்படுத்துவதிலும் இந்த இணைய தளம் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.
மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி தனது உரையில், பெண்களுக்கு அதிகாரமளித்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். 2014-15 ஆம் ஆண்டில் 918 ஆக இருந்த பாலின பிறப்பு விகிதம் 2023-24 ஆம் ஆண்டில் 930 ஆக உயர்ந்துள்ளது என்பதை மேற்கோள் காட்டினார். குழந்தை திருமண தடைச் சட்டம், 2006-ன் கீழ், 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மற்றும் 21 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சம்பந்தப்பட்ட திருமணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். கடந்த ஆண்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தை திருமணங்களைத் தடுப்பதில் கிடைத்த வெற்றியையும் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டபடி, குழந்தை திருமண விகிதங்களை உலக அளவில் குறைப்பதில் இந்தியாவின் பங்களிப்பையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
நவம்பர் 25 (பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்) முதல் டிசம்பர் 10 (மனித உரிமைகள் தினம்) வரை மேற்கொள்ளப்படும் உலகளாவிய இயக்கமான பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயல்பாட்டு இயக்கத்துடன் இசைவானதாக இந்தத் தொடக்கம் அமைந்துள்ளது .பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம் போன்ற முன்னோடி முயற்சிகளின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, இந்த இயக்கம் குழந்தை திருமணத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கையை ஊக்குவிக்க முயல்கிறது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர், பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம், செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்ற திட்டங்களின் முக்கியப் பங்கு பற்றி குறிப்பிட்டார். இந்த தொலைநோக்கு பார்வையை அடைவதற்கு அரசு, அதிகாரிகள், சமூக அமைப்புகள் மற்றும் குடிமக்களின் கூட்டு முயற்சி தேவை என்று அவர் மேலும் கூறினார்.
குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா இயக்கம் குழந்தை திருமணத்தை தீவிரமாக எதிர்க்க அனைத்து குடிமக்களுக்கும் அழைப்பு விடுக்கிறது. இந்த முயற்சி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியாகும். இந்த நோக்கத்திற்காக தங்கள் உறுதிப்பாட்டைக் காட்ட இந்தியா முழுவதும் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைத் திருமணத் தடுப்பு அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் குழந்தை திருமணத்திற்கு எதிரான போராட்டத்தை வென்ற தனிநபர்களுடன் ஆன்லைன் உரையாடலும் இடம்பெற்றது. இந்த சாம்பியன்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மற்றவர்களையும் இந்த இயக்கத்தில் சேர ஊக்குவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 150 மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட நிர்வாக அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பஞ்சாயத்துகள், பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இது அமைச்சகத்தின் யூடியூப் அலைவரிசையில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு 82,000-க்கும் அதிகமான பார்வையாளர்களை சென்றடைந்தது. குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் விழாவில் 50,00,000-க்கும் அதிகமானோர் இணைய ஒளிபரப்பு மூலம் பங்கேற்றனர்.
உறுதிமொழி எடுக்கவும், இயக்கத்தை ஆதரிக்கவும், தயவுசெய்து காண்க: https://stopchildmarriage.wcd.gov.in
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078032
*****
SMB/KV/DL
(Release ID: 2078142)
Visitor Counter : 9