பாதுகாப்பு அமைச்சகம்
லாவோசில் நடைபெற்ற 11-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு இடையே அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் திரு ராஜ்நாத் சிங் சந்திப்பு
Posted On:
21 NOV 2024 4:32PM by PIB Chennai
நவம்பர் 21, 2024 அன்று லாவோசின் வியன்டியானில் நடைபெற்ற 11-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின்போது, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு லாயிட் ஜே ஆஸ்டினைச் சந்தித்தார். அதிகரித்த செயல்பாட்டு ஒருங்கிணைப்பு, தகவல் பகிர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு இரு தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர். தொழில்துறை கண்டுபிடிப்பு, ஜெட் என்ஜின்கள், வெடிமருந்துகள், தரை நகர்வு அமைப்புகள் ஆகியவற்றுக்கான முன்னுரிமை கூட்டு உற்பத்தி ஏற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தற்போதைய ஒத்துழைப்பு உட்பட அமெரிக்க-இந்தியா பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இருதரப்பும் அங்கீகரித்தன.
2024-ல் ஆகஸ்ட் மாதத்தில் தமது சமீபத்திய பயனுள்ள மற்றும் வெற்றிகரமான அமெரிக்க பயணத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் நினைவு கூர்ந்தார். அதில் இரண்டு முக்கியமான ஆவணங்கள் இறுதி செய்யப்பட்டன – விநியோக பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் தொடர்பு அதிகாரிகளை பணியமர்த்துவது தொடர்பான ஒப்பந்தம். சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக்கை பராமரிப்பதற்கான ராணுவ கூட்டாண்மை மற்றும் பரஸ்பர செயல்பாட்டை வலுப்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளை இரு தரப்பினரும் வரவேற்றனர்.
கடந்த செப்டம்பர் 21-ந் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்ட வெற்றிகரமான குவாட் உச்சிமாநாட்டின் கவனத்தை ஈர்த்த திரு ராஜ்நாத் சிங், இந்தோ-பசிபிக் பயிற்சிக்கான புதிய பிராந்திய கடல்சார் முன்முயற்சி, முதல் குவாட்-அட்-சீ கப்பல் பார்வையாளர் திட்டம் மற்றும் குவாட் இந்தோ-பசிபிக் லாஜிஸ்டிக்ஸ் நெட்வொர்க் பைலட் திட்டத்தை தொடங்குதல் உள்ளிட்ட ஒப்புக்கொள்ளப்பட்ட வழங்கல்களில் இரு தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் இயற்கை பேரழிவுகளை விரைவாகவும் திறமையாகவும் சமாளிப்பதற்கும், ஒருங்கிணைந்த முயற்சி தேவை என அவர் வலியுறுத்தினார்.
பாதுகாப்பு நலன்களுக்கு வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட இந்திய-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் அடைந்த உத்வேகத்தைத் தொடர இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் வளமான மற்றும் நீடித்த பங்களிப்புக்காக அமெரிக்க அமைச்சர் ஆஸ்டினுக்கு திரு ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்தார்.
ராஜ்நாத் சிங் தமது பதிவில், அமைச்சர் லாயிட் ஆஸ்டின் இந்தியாவின் சிறந்த நண்பர் என்றும், இந்திய-அமெரிக்க பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் அவரது பங்களிப்பு முன்மாதிரியானது என்றும் கூறினார். அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் அவருக்கு நல்வாழ்த்துக்களை திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
***
TS/PKV/RR/DL
(Release ID: 2075623)
Visitor Counter : 8