மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
புதுதில்லியில் இன்று நடைபெற்ற உலக மீன்வள தின கொண்டாட்டத்தில் மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் பங்கேற்றார்
Posted On:
21 NOV 2024 4:14PM by PIB Chennai
மீனவர்கள், மீன் விவசாயிகள் மற்றும் பிற பங்குதாரர்களின் பங்களிப்பையும் சாதனைகளைக் கொண்டாடவும், மீன்வளத் துறையின் நிலையான மற்றும் சமமான வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் (MoFAH&D) கீழ் உள்ள மீன்வளத் துறை 2024 உலக மீன்வள தினத்தை “இந்தியாவின் நீல மாற்றம்: சிறிய அளவிலான மற்றும் நிலையான மீன்வளத்தை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளுடன் இன்று (21.11.2024) கொண்டாடியது. புதுடெல்லி சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பங்கேற்று பேசிய மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், இணையமைச்சர்கள் திரு ஜார்ஜ் குரியன், பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல், இத்தாலிக்கான இந்திய தூதர் திருமதி வாணி ராவ், ரோம் மீன்வளப் பிரிவின் இயக்குநரும், கூடுதல் இயக்குநருமான மானுவல் பராங்கே மற்றும் ஏனைய பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் பேசுகையில், மீன்வளத் துறையின் சாதனைகள் மற்றும் சவால்களை எடுத்துரைத்தார். உலகளவில் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராக இந்தியாவை மாற்றியதில் பங்களித்த மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளை மத்திய அமைச்சர் பாராட்டினார். சுமார் 30 மில்லியன் மக்கள், மீன் உற்பத்தி மதிப்புச் சங்கிலியில் ஈடுபட்டுள்ளனர். நீலப் புரட்சி, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத்திட்டம் (PMMSY), பிரதமரின் மீன் விவசாயிகள் மேம்பாட்டுத்திட்டம் (PMMKSY) போன்ற துறையின் பல்வேறு முயற்சிகள், நாட்டில் மீன் உற்பத்தியை அதிகரிக்க உறுதுணை புரிந்துள்ளதாக அவர் கூறினார். இதன் விளைவாக, 2014 முதல் மீன் உற்பத்தி கிட்டத்தட்ட இரட்டிப்பாகி 17.5 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. உள்நாட்டு மீன்பிடித்தல் இப்போது கடல் மீன்பிடித்தலை விட அதிகமாக உள்ளது, உள்நாட்டு மீன் பிடிப்பு 13.2 மில்லியன் டன்னாக பங்களித்துள்ளது. மீன்வளத் துறைக்கான முக்கிய சவால்கள் மற்றும் தீர்வுகளையும் அவர் குறிப்பிட்டார்.
பிளாஸ்டிக் மாசுபாடு, பாரம்பரிய மீன்பிடிப்பிலிருந்து கரியமிலவாயு வெளியேற்றம், நீர் மாசுபாடு போன்ற பிரச்சினைகளை அவர் எடுத்துரைத்தார். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கும், நீரின் தரத்தை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் அரசு எடுத்துவரும் முயற்சிகளை அவர் சுட்டிக்காட்டினார்.
மீன்வளத் துறையின் ஒழுங்கமைக்கப்படாத தன்மை மற்றும் உள்கட்டமைப்பு இடைவெளிகள் குறித்தும், மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (FIDF) போன்ற சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளின் அவசியத்தையும் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் வலியுறுத்தினார். மீன் உற்பத்தியில் இந்தியாவின் உலகளாவிய தலைமையை உறுதி செய்வதற்காக நவீன நுட்பங்கள், கொள்கை ஒருங்கிணைப்பு மற்றும் நீண்டகால இலக்குகளில் கவனம் செலுத்தி, நிலையான மற்றும் பொருளாதார ரீதியாக அதிகாரமளிக்கும் மீன்வளத் துறைக்கான ஒரு பார்வையை அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், திரு ராஜீவ் ரஞ்சன் சிங், மீன்வளத் துறையை மாற்றியமைத்தல் மற்றும் இந்தியாவின் நீலப் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல்வேறு முக்கிய முன்முயற்சிகள் மற்றும் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். 5-வது கடல் மீன்வள கணக்கெடுப்பைத் தொடங்குதல், நிலையான சுறா மேலாண்மைக்கான சுறாக்கள் மீதான தேசிய செயல் திட்டம் மற்றும் இலங்கையின் ஒத்துழைப்புடன் வங்காள விரிகுடா பிராந்தியத்தில் சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தலைத் தடுக்க IUU (சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத) மீன்பிடித்தல் குறித்த பிராந்திய செயல் திட்டத்திற்கு இந்தியாவின் ஒப்புதல் ஆகியவை இதில் அடங்கும்.
கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு பண்ணைகளை ஆன்லைனில் பதிவு செய்ய கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தின் புதிய ஒற்றைச் சாளர அமைப்பு (NSWS) தொடங்கப்பட்டது. இத்துறையில் கார்பன் வரிசைப்படுத்தும் நடைமுறைகளைப் பயன்படுத்தி, தன்னார்வ கார்பன் சந்தைக்கான (VCM) கட்டமைப்பை செயல்படுத்த கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில், இந்தியாவில் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக முற்போக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள் மற்றும் தனிநபர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
2015 முதல், நீலப்புரட்சி திட்டம், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (FIDF), பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத்திட்டம் மற்றும் அதன் துணைத் திட்டமான பிரதமரின் மீன் விவசாயிகள் மேம்பாட்டுத்திட்டம் போன்ற முக்கிய முயற்சிகள் மூலம் மத்திய அரசு ரூ.38,572 கோடி முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2075498
-------------
TS/MM/RS/DL
(Release ID: 2075603)
Visitor Counter : 19