பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு காஷ்மீரில் இரட்டை குழாய் வழி ஜவஹர் சுரங்கப்பாதையை புதுப்பிக்கும் பணியை எல்லைப்புற சாலைகள் அமைப்பு மேற்கொண்டுள்ளது; இந்தப்பாதை டிசம்பர் 2024-ல் பொதுமக்களுக்காக திறக்கப்படும்

Posted On: 21 NOV 2024 5:46PM by PIB Chennai

ஜம்மு-காஷ்மீரில் 1956-ம் ஆண்டில் கட்டப்பட்ட 2.5 கி.மீ நீளமுள்ள இரட்டை குழாய் வழி ஜவஹர் சுரங்கப்பாதையின் விரிவான மறுசீரமைப்பை, எல்லைப்புற சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ) மேற்கொண்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயனாளிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்துவதற்காக இது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நவீன சுரங்கப்பாதைகளுக்கு இணையாக இது கொண்டு வரப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட சுரங்கப்பாதை டிசம்பர் 2024-ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும்.  

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் ரூ.62.5 கோடி நிதியுதவியுடன் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான முறையில் புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. பி.ஆர்.ஓ.வின் புராஜெக்ட் பீக்கான் மூலம் ஏறத்தாழ ஓராண்டில் இப்பணி முடிக்கப்பட்டுள்ளது. புனரமைப்பு பணிகள் சிவில் மற்றும் எலக்ட்ரோ மெக்கானிக்கல் பணிகளை உள்ளடக்கியது. இதில் 76 உயர் வரையறை சிசிடிவி கேமராக்கள், புகை மற்றும் தீ சென்சார்கள், SCADA அமைப்புகள் மற்றும் நிகழ்நேர மேற்பார்வைக்கான மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு அறை ஆகியவை அடங்கும்.

ஜவஹர் சுரங்கப்பாதை வரலாற்று ரீதியாக, காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லே பகுதியை பிர்-பஞ்சால் மலைத்தொடர் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரு முக்கிய பாதையாக செயல்பட்டுள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை 44-க்கு மாற்று பாதையாக செயல்படுகிறது. எண்ணெய் டேங்கர்கள், வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட மற்றும் பெட்ரோல் வாகனங்கள் போன்ற புதிதாக கட்டப்பட்ட குவாசிகுண்ட்-பானிஹால் சுரங்கப்பாதையைக் கடக்க அனுமதிக்கப்படாத வாகனங்கள் இந்த சுரங்கப்பாதையைப் பயன்படுத்தும்.

***

MM/RS/DL


(Release ID: 2075601) Visitor Counter : 7


Read this release in: English , Urdu