ஆயுஷ்
7-வது இயற்கை மருத்துவ தினத்தையொட்டி தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தின் சார்பில், 1,500 முதியோருக்கு மருத்துவ சிகிச்சை
Posted On:
19 NOV 2024 5:36PM by PIB Chennai
7வது இயற்கை மருத்துவ தினத்தைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியில், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் (என்ஐஎன்), 'ஆரோக்கியமான வயதான மற்றும் நீண்ட ஆயுள்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட நாடு முழுவதும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் அதிகரித்து வரும் வயதான மக்கள்தொகையின் நல்வாழ்வை இலக்காகக் கொண்டு, நோய்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளாக இயற்கை சிகிச்சை மற்றும் நிலையான வாழ்க்கை என்ற காந்திய கொள்கைகளை இந்தப் பிரச்சாரம் வலியுறுத்துகிறது.
இந்தியாவில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை (60+ வயதுடையவர்கள்) 2050-ம் ஆண்டில், 153 மில்லியனிலிருந்து 347 மில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரக்கத்தை வளர்ப்பது, நல்ல ஊட்டச்சத்தை ஊக்குவிப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்றுவது மனநல சவால்களை எதிர்கொள்வது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தப் பிரச்சாரம் எடுத்துக்காட்டுகிறது. கூடுதலாக, இந்த முயற்சி இயற்கையுடன் மீண்டும் இணைக்க வேண்டியதன் அவசியத்தையும், சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு தொடர்பான சுகாதார பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் காட்டுகிறது.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, என்ஐஎன், புனே மற்றும் அதைச் சுற்றியுள்ள 35 முதியோர் இல்லங்களில் சுகாதார முகாம்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது சுமார் 1,500 முதியவர்களை சென்றடைந்தது. இந்த முகாம்களில் யோகா அமர்வுகள், சுகாதார விவாதங்கள் மற்றும் மூத்த குடிமக்களின் முழுமையான நல்வாழ்வை ஆதரிக்க வடிவமைக்கப்பட்ட இயற்கை மருத்துவ சிகிச்சைகள் ஆகியவை அடங்கும்.
'உடல் ஆரோக்கியத்திற்காக இயற்கையை நோக்கித் திரும்புதல்' மற்றும் 'உணர்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்திற்கான சமூகத்திற்குத் திரும்புதல்' ஆகியவை இயற்கையுடன் இணைவதன் அவசியத்தையும், முழுமையான ஆரோக்கியத்திற்கான சமூக பிணைப்புகளை வளர்ப்பதையும் பிரதிபலிக்கிறது.
இயற்கை மருத்துவ தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 2025 ஜனவரி 10-11 தேதிகளில் புனேவில் திட்டமிடப்பட்டுள்ள கல்லூரிகளுக்கு இடையிலான அறிவுசார் சந்திப்பை என்ஐஎன் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் ஆரோக்கியமான போட்டி மற்றும் அறிவுப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கான தளத்தை வழங்குவதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுகாதாரத்தின் மூலம் தனிநபர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக 2018-ம் ஆண்டில் ஆயுஷ் அமைச்சகத்தால் இயற்கை மருத்துவ தினம் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. 1945-ம் ஆண்டில் அகில இந்திய இயற்கை சிகிச்சை அறக்கட்டளையின் வாழ்நாள் தலைவராக மகாத்மா காந்தி பொறுப்பேற்ற நாளான நவம்பர் 18 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
***
PKV/RR/DL
(Release ID: 2074763)
Visitor Counter : 47