பாதுகாப்பு அமைச்சகம்
ஒருங்கிணைந்த தலைமையகப் பாதுகாப்புப் பணியாளர்கள் பிரிவு வருடாந்திர கூட்டு மின்காந்த வாரியக் கூட்டம் 2024 ஐ நடத்தியது
Posted On:
14 NOV 2024 2:34PM by PIB Chennai
கூட்டு மின்காந்த வாரியத்தின் வருடாந்திரக் கூட்டம் நவம்பர் 13 அன்று ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் (செயல்பாடுகள்) துணைத் தலைவர் ஏர் மார்ஷல் ஜீதேந்திர மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டிஆர்டிஓ, டிடிபி மற்றும் முப்படைகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மின்னணு போர்முறை, கையொப்ப மேலாண்மை, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், இஎம்ஐ / இஎம்சி, ஸ்பெக்ட்ரம் மேலாண்மை மற்றும் மனித வள மேலாண்மை போன்ற பகுதிகளில் கூட்டு செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு குறித்த பல அம்சங்கள் இந்தக் கூட்டத்தில் இடம் பெற்றிருந்தன.
இந்த நிகழ்வில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்பட்ட இ-தரங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தானியங்கி, திறமையான திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு ஸ்பெக்ட்ரமின் நிர்வாகத்தை சிறப்பாக செயல்படுத்தும். அத்துடன் உயர் அதிர்வெண் பட்டைகளில் புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும். பாஸ்கராச்சார்யா தேசிய விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவி-தகவலியல் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தத் தனித்துவமான மென்பொருள், போர்க்காலம் மற்றும் அமைதிக் காலம் என இரண்டிலும் பாதுகாப்பு உபகரணங்களின் குறுக்கீடு இல்லாத செயல்பாட்டிற்கான திட்டமிடலை மேம்படுத்தும்.
'முப்படைகளுக்கிடையேயான கூட்டு மின்னணு போர் நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பை அடைவது மற்றும் ஸ்பெக்ட்ரம் போரில் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு வரைபடத்தை உருவாக்குவது' என்ற ஒற்றை நோக்கத்துடன் வருடாந்திரக் கூட்டம் நடத்தப்பட்டது. எதிர்காலத்திற்கான தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பயிற்சி முன்னுரிமைகளை அடையாளம் காணவும் இந்தக் கூட்டம் முயன்றது. சிறப்புரையாற்றிய ஏர் மார்ஷல் சிறப்பான செயல்பாடுகளுக்கு அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைப்பு அவசியம் என வலியுறுத்தினார். கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற முதல் கூட்டுப் பயிற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டதை அவர் பாராட்டினார்..
***
(Release ID: 2073259)
TS/PKV/ KV/KR
(Release ID: 2073299)
Visitor Counter : 17