பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியின கௌரவ தினம், பழங்குடியின பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது

Posted On: 14 NOV 2024 1:11PM by PIB Chennai

பகவான் பிர்ஸா முண்டா, நமது சுற்றுப்புறத்தோடு எப்படி வாழ்வது, நமது கலாச்சாரம் குறித்து பெருமிதம் கொள்வது எப்படி என்பதை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவரால் ஈர்க்கப்பட்டு, அவரது கனவுகளை நிறைவேற்றவும், நமது பழங்குடி சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்கவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

- பிரதமர் நரேந்திர மோடி

அறிமுகம்

இந்தியாவின் வளமான கலாச்சார பன்முகத்தன்மை பெரும்பாலும் அதன் பழங்குடி சமூகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாட்டின் வரலாறு மற்றும் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். ஆண்டுதோறும் நவம்பர் 15 அன்று, பழங்குடியின கௌரவ தினம், குறிப்பாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்த சமூகங்களின் பங்களிப்புகளைக் கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. பழங்குடியினத் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், அதன் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் பழங்குடி குழுக்களின் முக்கியப் பங்கை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.

பின்னணி

2021-ம் ஆண்டு முதல், பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை கௌரவிக்கும் வகையில் நாடு முழுவதும் பழங்குடியின கௌரவ தினம் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது. சந்தால்கள், தமார்கள், கோல்கள், பில்கள், காசிகள் மற்றும் மிசோக்கள் தலைமையிலான இயக்கங்களுடன் சேர்ந்து பழங்குடியின சமூகங்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தன. இந்தப் புரட்சிகர போராட்டங்கள் மகத்தான துணிச்சல் மற்றும் தியாகத்தால் நிறைந்திருந்தன. ஆனால் அவற்றின் பங்களிப்புகள் பெரும்பாலும் மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

பிர்சா முண்டா தலைமையிலான உல்குலன் (புரட்சி) போன்ற பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான பழங்குடி இயக்கங்கள் பிரிட்டிஷ் ஒடுக்குமுறையை எதிர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்தது மட்டுமல்லாமல், ஒரு தேசிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. பழங்குடி சமூகங்களால் பகவான் என்று போற்றப்படும் பிர்சா முண்டா, சுரண்டும் காலனிய அமைப்புக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை மேற்கொண்டார்.

இந்த அறியப்படாத தியாகிகளின் தியாகங்கள் ஒருபோதும் மறக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் விடுதலைப் பெருவிழா 2021-ன் கொண்டாட்டத்தின்போது நவம்பர் 15-ஐ பழங்குடியின கௌரவ தினமாக மத்திய அரசு அறிவித்தது. பழங்குடி சமூகங்களின் புகழ்பெற்ற வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை இந்த நாள் கொண்டாடுகிறது. ஒற்றுமை, பெருமை மற்றும் இந்தியாவின் சுதந்திரம் மற்றும் முன்னேற்றத்திற்கு அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

2024-ம் ஆண்டில், பழங்குடியின கௌரவ தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், நவம்பர் 13 அன்று சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூரில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நவம்பர் 15-ம் தேதியன்று, பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த தினக் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையிலும் பிரதமர் திரு நரேந்திர மோடி, பழங்குடியின கௌரவ தினத்தை நினைவுகூரும் வகையிலும், பீகார் மாநிலம் ஜமுய் செல்கிறார். பகவான் பிர்சா முண்டாவை கௌரவிக்கும் வகையில் நினைவு நாணயம் மற்றும் தபால் தலையையும் பிரதமர் வெளியிடவுள்ளார். கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் உள்ள பழங்குடியின சமூகங்களை மேம்படுத்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்ட ரூ.6,640 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

முக்கிய வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்

நலிவடைந்த பழங்குடியினர் மேம்பாட்டுக்கான பிரதமரின் திட்டத்தின் கீழ் 11,000 வீடுகளுக்கான புதுமனை புகுவிழாவில் பிரதமர் பங்கேற்கிறார்.

பழங்குடியினர் பகுதிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் மேம்பாட்டுக்கான பிரதமரின் திட்டத்தின் கீழ் 23 நடமாடும் மருத்துவப் பிரிவுகளையும், மண்ணின் தந்தை பழங்குடியின கிராம செழுமைத் திட்டத்தின் கீழ், 30 கூடுதல் நடமாடும் மருத்துவப் பிரிவுகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

-----

(Release ID 2073246)

TS/IR/KPG/KR


(Release ID: 2073263) Visitor Counter : 84


Read this release in: Urdu , English , Hindi , Telugu