சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முக்கியமான கனிமங்கள் துறையில் ஒத்துழைப்புக்காக சர்வதேச எரிசக்தி முகமையுடன் சுரங்க அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

Posted On: 13 NOV 2024 4:44PM by PIB Chennai

 

முக்கிய கனிமங்கள் துறையில் ஒத்துழைப்புக்காக சர்வதேச எரிசக்தி முகமையுடன் சுரங்க அமைச்சகம் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தற்போதைய ஒத்துழைப்பு, முக்கியமான கனிமத் துறையில் நம்பகமான புள்ளி விவரங்கள், பகுப்பாய்வு மற்றும் கொள்கை பரிந்துரைகளை அணுகுவதற்கு இந்தியாவுக்கு வழங்குவதுடன், அதன் மூலம் அதன் முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்துவதுடன், திட்டமிட்ட ஆதார மேலாண்மையையும் உறுதி செய்யும். சர்வதேச எரிசக்தி முகமை என்பது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டமைப்பிற்குள் உள்ள ஒரு சர்வதேச அமைப்பாகும்.

இந்த ஒத்துழைப்பு முக்கியமான கனிமத் துறையில் இந்தியா தனது கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் முதலீட்டு உத்திகளை ஒழுங்குபடுத்தவும், அவற்றை உலகத் தரம் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப ஒருங்கிணைக்கவும் உதவும். மற்ற சர்வதேச எரிசக்தி முகமை உறுப்பு நாடுகள் மற்றும் அதனுடன் இணைந்த நாடுகளின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதன் மூலம், நிலையான மற்றும் நெகிழ்திறன் கொண்ட எரிசக்தி அமைப்புகளை நோக்கிய தனது முன்னேற்றத்தை இந்தியா துரிதப்படுத்த முடியும்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவுக்கும் சர்வதேச எரிசக்தி முகமை உறுப்பு நாடுகளுக்கும் இடையே திறன் வளர்ப்பு மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும். தரவு சேகரிப்பு, மாதிரியாக்கம் மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில் ஒத்துழைப்பு இந்தியாவின் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் முக்கியமான கனிமத் துறையில் நிறுவன திறனை மேம்படுத்தும். மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள், யிலரங்குகள், பயிற்சி திட்டங்கள் தொழில்நுட்ப மேம்பாடு, பிரித்தெடுக்கும் நுட்பங்கள் மற்றும் முக்கியமான கனிமங்களுக்கான மறுசுழற்சி முறைகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளை வளர்க்க உதவும்.

சர்வதேச எரிசக்தி முகமை மற்றும் மத்திய அரசின், சுரங்க அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை 2024 அக்டோபர் 3 அன்று ஒப்புதல் அளித்தது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு. வி.எல்.காந்த ராவ், சர்வதேச எரிசக்தி முகமையின் செயல் இயக்குநர் டாக்டர் ஃபாத்தி பிரோல் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2073034

----

IR/KPG/KR


(Release ID: 2073061) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi