மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கல்வி தினம் 2024: கல்வியின் மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குதல்

Posted On: 10 NOV 2024 7:08PM by PIB Chennai

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், முக்கிய கல்வியாளருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11-ஆம் தேதி தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்வியின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது. நாட்டின் மக்கள் தொகையில் 65% பேர் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால், அவர்களுக்குத் தரமான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்குவது மிகவும் முக்கியம். மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் தேசத்தை முன்னேற்றத்தை நோக்கி இயக்க இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வலுவான கல்வி உள்கட்டமைப்பை உருவாக்க இந்திய அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது.

 

கல்வி மூலம் இந்தியாவை மாற்றுதல்

 

பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் அரசியலமைப்பு விதிகள் மூலம் கல்விக்கான அணுகலை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துள்ளது. அரசியலமைப்பின் 86வது திருத்தத்தின் 21-ஏ பிரிவு மூலம் இலவச ஆரம்பக் கல்வியின் அறிமுகம், ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக உறுதி செய்கிறது. ஏப்ரல் 1, 2010 முதல் நடைமுறைக்கு வந்த கல்வி உரிமை (ஆர்.டி.இ) சட்டம், 2009, பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்யும் முறையான பள்ளியில் தரமான தொடக்கக் கல்வியை ஒவ்வொரு குழந்தையும் பெறுவதை ஆதரிக்கிறது. அரசின் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளால் ஆதரிக்கப்படும் இந்த சட்ட கட்டமைப்புகள், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவமான கல்வி முறையை உருவாக்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

 

பிரதமர் திரு  நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், மத்திய அமைச்சரவை ஜூலை 29, 2020 அன்று தேசிய கல்விக் கொள்கை 2020க்கு ஒப்புதல் அளித்தது. இந்தக் கொள்கை,  21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப இந்தியாவின் கல்வி முறையை மாற்றியமைக்க முயல்கிறது. மேலும் உள்ளடக்கிய மற்றும் முன்னோக்கிச் சிந்திக்கும் அணுகுமுறையை வளர்க்கிறது.

 

பிரதமர் திரு நரேந்திர மோடி, செப்டம்பர் 7, 2022 அன்று பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இந்த முயற்சி இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத், திட்டம் மாணவர்களிடையே தரமான கல்வி, அறிவாற்றல் வளர்ச்சி மற்றும் 21-ஆம் நூற்றாண்டின் திறன்களை வளர்க்கும். மொத்தம் ரூ.27,360 கோடி திட்ட செலவுடன், இது ஐந்து ஆண்டுகாலம் (2022-2027) செயல்படுத்தப்படும். இதற்கான மத்திய அரசின் பங்கு ரூ.18,128 கோடியாகும்.

 

உலகளாவிய தலைமைத்துவத்திற்கான இந்தியாவின் பாதை அதன் கல்வி முறையின் வலிமையுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. தரமான கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கும், நெகிழ்வான கற்றல் சூழலை உருவாக்குவதற்கும், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைக்கு 2024-25 நிதியாண்டு பட்ஜெட்டில் சாதனையாக ரூ.73,498 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2023-24 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட ரூ.12,024 கோடி (19.56%) கணிசமான அதிகரிப்பைக் குறிக்கிறது.

 

கேந்திரிய வித்யாலயாக்களுக்கு ரூ. 9,302 கோடியும், நவோதயா வித்யாலயாக்களுக்கு ரூ. 5,800 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கணிசமான முதலீடு இந்தியாவின் கல்வி முறையை மேலும் உயர்த்துவதற்கான தெளிவான நோக்கத்தை பிரதிபலிக்கிறது.

 

 

கல்வியானது தடைகளை உடைத்து, வாய்ப்பின் கதவுகளைத் திறந்து, சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கு தனிநபர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள் மற்றும் விரிவான சீர்திருத்தங்கள் மூலம் ஒரு வலுவான அமைப்பை உருவாக்கி, இந்தியாவின் கல்வி சூழல் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பாரம்பரியத்தை நாம் மதிக்கும்போது, ​​அனைவருக்கும் பிரகாசமான, மேலும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கான அடித்தளமாக கல்விக்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2072203

BR/KR

 

(Release ID: 2072203)

 

***


(Release ID: 2072278) Visitor Counter : 26


Read this release in: English , Urdu , Hindi