மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் செயல்விளக்கம் குறித்த பயிலரங்கம் கொச்சியில் நாளை நடைபெறுகிறது
Posted On:
07 NOV 2024 1:37PM by PIB Chennai
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வளத்துறை (MoFAH&D) மற்றும் ஹைதராபாத்தில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (NFDB) ஆகியவை நவம்பர் 8, 2024 அன்று (காலை 10:45 மணி), கேரளாவின் கொச்சியில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்-மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் (CMFRI) மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் முன்னிலையில், மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் செயல்விளக்கம் குறித்த பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள், கேரளாவைச் சேர்ந்த மாநில மீன்வள அதிகாரிகள், மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மீன் வளர்ப்பாளர்களுக்கு, நிலையான நீர்வாழ் உயிரின வளர்ப்பு நடைமுறைகளை ஆதரிப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மீன் தீவனமான "கேடல்மின் BSF PRO" விநியோகத்தைத் தொடர்ந்து, CMFRI இயக்குநரின் வரவேற்புரையுடன் அமர்வு தொடங்கும். அத்துடன், "ஈஜி சைலாஸ் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்" என்ற தலைப்பில் ஒரு கையேடும் வெளியிடப்படும், இது துறையில் முக்கிய முன்னேற்றங்கள் மற்றும் பங்களிப்புகளை எடுத்துக்காட்டுகிறது. மேலும், இந்த அமர்வு இந்திய கடல் உயிரியல் சங்கத்தின் (MBAI) தேசிய விவாதத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தைக் குறிக்கும், இது நாடு முழுவதும் உள்ள கடல் அறிவியல் நிபுணர்களிடையே, ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிகழ்வாகும்.
புதுமையான புத்தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையில், ட்ரோன் தொழில்நுட்பத்தின் மாற்றத்தக்க திறனை எடுத்துரைக்கும் விளக்கக் காட்சியை என்.எஃப்.டி.பி வழங்கும். மீன் போக்குவரத்து, மீன் தீவனம் வழங்குதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கான உயிர்காப்பு கவச விநியோகம் போன்ற, மீன்வளத்தில் பல்வேறு ட்ரோன் பயன்பாடுகள் குறித்த நேரடி ட்ரோன் செயல் விளக்கத்துடன் நிகழ்ச்சி நிறைவடையும். இந்த பட்டறை புதுமையான தொழில்நுட்ப முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்த ஒரு தனித்துவமான தளத்தை வழங்குவதுடன், மீன்வளத் துறையை மாற்றியமைப்பதிலும் அதன் திறனை அதிகரிப்பதிலும் ட்ரோன் தொழில்நுட்பத்தின் முக்கியப் பங்கை மையமாகக் கொண்டுள்ளது. இதில், 700-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மீன்வளத் துறை, கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கப்பல் போக்குவரத்து இயக்குநரின் தொழில்நுட்ப உதவியுடன், மீன்பிடிக் கப்பல்களின் பதிவு, கணக்கெடுப்பு மற்றும் சான்றளிப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, கேரளாவின் கொச்சியில் உள்ள மத்திய மீன்வள கடல்சார் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனத்தில் 2024 நவம்பர் 8 ஆம் தேதி (காலை 9:30 மணி) ஒரு நாள் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்திய கப்பல் துறை (ஐஆர்எஸ்), இந்திய கப்பல் கழகம் (எஸ்சிஎல்) மற்றும் மீன்வள நிறுவனங்களான சிஃப்நெட், இந்திய மீன்வள ஆய்வு நிறுவனம் (எஃப்எஸ்ஐ), ஐசிஏஆர்-மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் (சிஐஎஃப்டி), ஐசிஏஆர்-மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (சிஎம்எஃப்ஆர்ஐ) மற்றும் கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (எம்பிஇடிஏ) ஆகியவற்றின் வல்லுநர்கள் இந்த பயிலரங்கில் கலந்து கொள்வார்கள்.
வணிகக் கப்பல் சட்டம், 1958-ன் கீழ் 'மீன்பிடிக் கப்பல்களின் பதிவாளராக' செயல்பட அதிகாரம் வழங்கப்பட்டுள்ள கடலோர மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் மீன்வளத் துறைக்கு கைகொடுத்து உதவுவதும், மீன்பிடி கலன்களின் பதிவை வழங்குவதற்கு அல்லது பதிவு செய்வதற்கு முன்தேவையாக உள்ள, மீன்பிடி கலன்களின் தொழில்நுட்ப தகுதி மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு நிபுணத்துவம் பெறுவதும் இந்த பயிலரங்கின் முக்கிய நோக்கமாகும். மீன்பிடி கலன்களை பதிவு செய்தல், நில அளவை செய்தல் மற்றும் சான்றிதழ் வழங்குதல் ஆகியவற்றிற்கு தேவையான பயிற்சி பெற்ற மனித வளத்துடன், மீன்வளத்துறைகள் தங்களது அமைப்பை நிறுவுவதற்கு ஏதுவாக, இந்த பணிமனை திறனை மேம்படுத்துவதுடன், மீன்வளத்துறைக்கு கைகொடுக்கவும் உதவும். மேலும், இந்தியாவில் மீன்வள ஆராய்ச்சி/ கணக்கெடுப்பு/ பயிற்சி கப்பல்களின் பராமரிப்பு மற்றும் இயக்கத்தில் மத்திய அரசு நிறுவனங்களான FSI, CIFNET, CIFTபோன்றவற்றுக்கு இந்த பயிலரங்கு உதவும்.
மீன்வளத்துறையில் ட்ரோன் பயன்பாடு
பிரதமரின் மீன் வள மேம்பாட்டுத்திட்டம் (PMMSY), மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையில் நிலையான, பொருளாதார ரீதியாக சாத்தியமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவ்வாறு செய்வதற்கான முக்கியமான வழிகளில் ஒன்று, வழங்கல் மற்றும் மதிப்பு சங்கிலியில் முழுமையான தீர்வுகளை வழங்கும் தொழில்நுட்ப உட்செலுத்துதல் ஆகும். நீர் மாதிரி, நோய் கண்டறிதல், கண்காணிப்பு நடவடிக்கைகள், தீவன மேலாண்மை மற்றும் மீன் போக்குவரத்து ஆகியவற்றில் முக்கியப் பயன்பாடுகளுடன், மீன்வளத் துறையில் பல்வேறு சவால்களுக்கு ட்ரோன்கள் புதுமையான தீர்வுகளை வழங்குகின்றன. மீன்வளர்ப்பு பண்ணைகள், மீன் சந்தைகளை நிர்வகித்தல், மீன்வள உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் சேதத்தை மதிப்பிடுதல் மற்றும் இயற்கை பேரழிவுகளின் போது, மீட்பு நடவடிக்கைகளில் உதவுதல் என அவற்றின் நோக்கம் நீண்டுள்ளது. கூடுதலாக, ட்ரோன்கள் துல்லியமான மீன்பிடி மற்றும் பங்கு மதிப்பீட்டை ஆதரிக்கின்றன. நீருக்கடியில் ட்ரோன்கள் இயற்கையான வாழ்விடங்களில் மீன்களின் நடத்தையை கண்காணிப்பதன் மூலமும், ஒழுங்கற்ற நீச்சல் முறைகள் போன்ற துயரத்தின் அறிகுறிகளை அடையாளம் காண்பதன் மூலமும் திறன்களை மேலும் மேம்படுத்துகின்றன.
***
MM/AG/DL
(Release ID: 2071533)
Visitor Counter : 33