கலாசாரத்துறை அமைச்சகம்
மகா கும்பமேளா 2025: பிரயாக்ராஜின் புனித நீரில் ஒற்றுமையைக் கொண்டாடுதல்
Posted On:
05 NOV 2024 6:35PM by PIB Chennai
மகா கும்பமேளா இந்து புராணங்களில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. உலகில் மத நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இது உள்ளது . இந்த புனித நிகழ்வு இந்தியாவில் உள்ள ஹரித்வார், உஜ்ஜைன், நாசிக் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய நான்கு இடங்களில் சுழற்சி முறையில் நடைபெறுகிறது. கங்கை முதல் ஷிப்ரா, கோதாவரி மற்றும் கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி சங்கமம் வரை இவை ஒவ்வொன்றும் ஒரு புனித நதியைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு கும்பமேளாவின் நேரமும் சூரியன், சந்திரன் மற்றும் வியாழன் ஆகியவற்றின் கிரக நிலைகளால் தீர்மானிக்கப்படுகிறது. இது ஆன்மீகத் தூய்மை மற்றும் சுய-அறிவொளிக்கான சிறப்பான காலத்தைக் குறிக்கிறது என்று நம்பப்படுகிறது. இந்திய புராணங்கள் மற்றும் கலாச்சாரத்தின் வளமான மண்ணில் வேரூன்றியிருக்கும் மகா கும்பமேளா, மனிதகுலத்தின் உள்ளார்ந்த அமைதி, சுய-புரிதல் மற்றும் ஆன்மீக ஒற்றுமைக்கான காலமற்ற தேடலின் ஆழமான பிரதிநிதித்துவமாகும்.
கும்பமேளா என்பது வானியல், ஜோதிடம், ஆன்மீகம், சடங்கு மரபுகள் மற்றும் சமூக-கலாச்சார பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளின் அறிவியலை உள்ளார்ந்த முறையில் உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும். இது, இந்து சமயத்தைச் சேர்ந்த பரந்த அளவிலான யாத்ரீகர்களால் கொண்டாடப்படுகிறது. மகா கும்பமேளா என்பது புனித நீராடும் விழாவை மையமாகக் கொண்ட, சடங்குகளின் துடிப்பான கலவையாகும். திரிவேணி சங்கமம் எனப்படும் கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகளின் சங்கமத்தில், இந்த முக்கியத்துவம் வாய்ந்த சடங்கை செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகிறார்கள். இந்த புனித நீரில் மூழ்கும் செயல் பாவங்களை சுத்தப்படுத்துவதாக நம்பப்படுகிறது, தனிநபர்கள் மற்றும் அவர்களின் முன்னோர்களை மறுபிறப்பு சுழற்சியில் இருந்து விடுவித்து, இறுதியில் அவர்களை மோட்சம் அல்லது ஆன்மீக விடுதலையை நோக்கி வழிநடத்துகிறது.
இந்த முக்கிய சடங்குடன், யாத்ரீகர்கள் ஆற்றங்கரையில் வழிபாட்டில் ஈடுபடுகிறார்கள் மற்றும் மரியாதைக்குரிய சாதுக்கள் மற்றும் துறவிகள் தலைமையில் ஆன்மீக சொற்பொழிவுகளில் கலந்து கொள்கிறார்கள். பிரயாக்ராஜ் மகா கும்பத்தின் போது பக்தர்கள் எந்த நேரத்திலும் நீராட ஊக்குவிக்கப்பட்டாலும், பௌஷ் பௌர்ணமியில் தொடங்கும் சில தேதிகள் குறிப்பாக மங்களகரமானவை.
2025-இல் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெறவுள்ள மகா கும்பமேளா வெறும் மக்கள் திரள் அல்ல; அது சுயத்தை நோக்கிய பயணம். சடங்குகள் மற்றும் அடையாளச் செயல்களுக்கு அப்பால், இது யாத்ரீகர்களுக்கு உள்ளான பிரதிபலிப்புக்கான வாய்ப்பையும், தெய்வீகத்துடன் ஆழமான தொடர்பையும் வழங்குகிறது. நவீன வாழ்க்கையின் தேவைகளால் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் உலகில், மகா கும்பமேளா, ஒற்றுமை, தூய்மை மற்றும் அறிவொளியின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது. , மனிதகுலம் மாறுபட்ட பாதைகளில் பயணித்த போதும், அமைதி, சுய-புரிதல் மற்றும் புனிதமானவற்றிற்கான நீடித்த பயபக்தியை நோக்கிய பகிரப்பட்ட பயணம் போன்றவற்றின் சாராம்சத்தில் நாம் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை நினைவூட்டும் ஒரு சக்திவாய்ந்த நிகழ்வாக இந்தக் காலமற்ற யாத்திரை திகழ்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2070943
BR/TS/KR
(Release ID: 2070943)
***
(Release ID: 2071074)