சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
மத்தியப் பிரதேச மாநிலம் பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் யானைகள் இறந்தது குறித்து மத்திய அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது
Posted On:
02 NOV 2024 6:40PM by PIB Chennai
மத்திய பிரதேசத்தின் பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் பத்து யானைகள் இறந்தது குறித்து விசாரிக்க சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு அமைப்பு (டபிள்யூசிசிபி), ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணையை நடத்துகிறது.
மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க 5 பேர் கொண்ட மாநில அளவிலான குழுவையும் மத்தியப் பிரதேச அரசு அமைத்துள்ளது. ஏபிசிசிஎஃப் (வனவிலங்கு) தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சிவில் சமூக பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், கால்நடை மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சம்பவம் குறித்து வனப்பகுதிகள், அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய பிரதேச முதன்மை தலைமை வன பாதுகாவலர் பாந்தவ்கரில் முகாமிட்டு விசாரணை மற்றும் இது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகிறார். மறுபுறம், கூடுதல் வன தலைமை இயக்குநர் (புலிகள் மற்றும் யானைகள் திட்டம்), மற்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர், ஆகியோர் அந்த இடங்களைப் பார்வையிட்டு, பல்வேறு தொடர்புடைய பிரச்சினைகள் மற்றும் யானைகளின் இறப்புக்கான காரணம் குறித்து மாநில அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பகிர்ந்த முதற்கட்ட தகவல்களின்படி, யானைகள் விஷம் குடித்ததால் இறந்திருக்கலாம் என தெரிகிறது. விரிவான பிரேத பரிசோதனை அறிக்கைகள், திசுநோயியல், நச்சுயியல் அறிக்கைகளின் முடிவுகள் மற்றும் பிற உறுதிப்படுத்தும் சான்றுகள் மூலம் மட்டுமே மரணத்திற்கான காரணம் உறுதி செய்யப்படும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க மாநில அதிகாரிகளால் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், பாந்தவ்கர் சரணாலயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற யானைக் கூட்டங்கள் தொடர்பான கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
பின்னணி:
29.10.24 அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தின் படௌர், கியாதுலி மலைத்தொடரின் சல்கானியா பீட்ஸில் நான்கு யானைகள் இறந்து கிடந்ததை பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தின் ரோந்து ஊழியர்கள் கண்டுபிடித்தனர். மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடுதல் வேட்டையில், மேலும் 6 யானைகள் உடல்நிலை சரியில்லாமல் அல்லது மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டன. கள ஊழியர்கள் மற்றும் உள்ளூர் கால்நடை அதிகாரிகள் நோய்வாய்ப்பட்ட யானைகளுக்கு சிகிச்சையைத் தொடங்கினர். இதற்கு வனவிலங்கு தடயவியல் மற்றும் சுகாதார பள்ளியின் கால்நடை மருத்துவர்கள் குழு ஆதரவளித்தது.
ஆனால், நோய்வாய்ப்பட்ட 4 யானைகள் 30.10.24 அன்று உயிரிழந்தன. மேலும், தொடர் மருந்துகள் மற்றும் சிகிச்சைக்குப் பிறகும், மீதமுள்ள இரண்டு நோய்வாய்ப்பட்ட மற்றும் மயக்கமடைந்த யானைகள் 31.10.24 அன்று உயிரிழந்தன. இறந்த 10 யானைகளில் ஒன்று ஆண் யானை. ஒன்பது பெண் யானைகள். மேலும், இறந்த 10 யானைகளில் 6 யானைகள் இளம் வயதுடையவை. 4 யானைகள் பெரியவை.
பத்து யானைகளின் பிரேத பரிசோதனையை 14 கால்நடை மருத்துவர்கள் / வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழு மேற்கொண்டது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு உள்ளுறுப்புகள் 01.11.24 அன்று நச்சுயியல் மற்றும் திசுநோயியல் ஆய்வுகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும், 30.10.24 அன்று நோய்வாய்ப்பட்ட யானைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டபோது, ரத்தம் மற்றும் பிற மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அனுப்பப்பட்ட மாதிரிகளில் நச்சுத்தன்மை இருப்பது முதற்கட்டமாக தெரிய வந்தது.
*****
PLM/KV
(Release ID: 2070359)
Visitor Counter : 43