பாதுகாப்பு அமைச்சகம்
ஸ்வாலம்பன் 3.0: அதிதி 3.0 சவால், டிஸ்க் 13 ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
புதிய கண்டுபிடிப்பாளர்களும், புதிய தொழில் முனைவோரும் ஆயுதப் படைகளுக்கு அவசியமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும்: திரு ராஜ்நாத் சிங்
Posted On:
29 OCT 2024 6:03PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (29.10.2024) நடைபெற்ற கடற்படை கண்டுபிடிப்பு, உள்நாட்டுமயமாக்கல் அமைப்பின் (NIIO) மாநாடான 'ஸ்வலாம்பன்' மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார். ஐடெக்ஸ் (அதிதி 3.0) சவாலுடன் புதுமையான தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கான டிஸ்க் புத்தொழில் சவால்களின் 13 வது பதிப்பை அவர் தொடங்கி வைத்தார். இந்த சவால்கள் உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும் செயல்பாட்டு திறன்களையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அதிதி 3.0 ஆனது உயர் சக்தி நுண்ணலை ஆயுத அமைப்பை வடிவமைப்பதற்கான இந்திய கடற்படையின் சவால் ஆகும்.
இந்திய ராணுவத்திலிருந்து மூன்று, இந்திய கடற்படை, இந்திய விமானப்படையிலிருந்து தலா இரண்டு என ஏழு சவால்களை டிஸ்க் 13 முன்வைக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஐடெக்ஸ் வெற்றியாளர்களையும் ஹெக்கத்தான் விருது பெற்றவர்களையும் பாதுகாப்பு அமைச்சர் கௌரவித்தார். 'ஸ்வாலம்பன்' மாநாட்டின் கடைசி இரண்டு அமர்வுகளில், ஸ்பிரிண்ட் சவால்களின் கீழ் இந்திய தொழில்துறைகளிடமிருந்து 2,000 க்கும் மேற்பட்ட முன்மொழிவுகளை இந்திய கடற்படை பெற்றது.
இந்த திட்டங்கள் 155 சவால்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும், இது 171 ஒப்பந்தங்களை மேற்கொள்ள உதவும் என்றும் நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
ஆயுதப் படைகளின் சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை வழங்கியதற்காக வெற்றியாளர்களைப் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார். அவர்களின் சாதனைகள் அசாதாரணமானவை என்று அவர் கூறினார்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வெற்றியை மேற்கோள் காட்டிய திரு ராஜ்நாத் சிங் , டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் மதிப்பின் அடிப்படையில் இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய நாடாக உருவெடுத்துள்ளது என்று கூறினார். ஜன் தன், ஆதார், மொபைல் ஆகியவை மூன்றும் அரசின் திட்டங்களை எளிதாகவும், வெளிப்படையாகவும் வழங்குவதற்கு வழிவகுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் தற்சார்பு முயற்சிகளை எடுத்துரைத்த பாதுகாப்புத்துறை அமைச்சர், கடந்த சில ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் தேசிய பாதுகாப்பை மனதில் கொண்டு இந்தியாவில் ஒரு புதுமையான கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளன என்று கூறினார். ஆயுதங்கள் உபகரணங்களின் இறக்குமதியை நாம் மிகவும் சார்ந்திருந்த ஒரு காலம் இருந்தது எனவும், பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் விளைவாக கடந்த சில ஆண்டுகளில் நிலைமை வேகமாக மேம்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா இப்போது சுயசார்பை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் ஏ.பி.சிங், பாதுகாப்புத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு ஆர்.கே.சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறை செயலாளரும் டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
---
AD/PLM/KPG/DL
(Release ID: 2069357)
Visitor Counter : 14