பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் சில பகுதிகளில் உள்ள கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு இந்தியா-சீனா இடையே விரிவான கருத்தொற்றுமை என்பது தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் தீர்வுகளைத் தருகின்றன என்பதற்கான சான்றாகும்: சாணக்யா பாதுகாப்பு உரையாடல் 2024-ல் பாதுகாப்பு அமைச்சர் பேச்சு

Posted On: 24 OCT 2024 5:59PM by PIB Chennai

புதுதில்லியில்  2024, அக்டோபர் 24  அன்று நடைபெற்ற சாணக்யா பாதுகாப்பு உரையாடலில் முக்கிய உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் சில பகுதிகள் குறித்து ஏற்பட்டுள்ள  கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான இந்தியா-சீனா இடையேயான விரிவான கருத்தொற்றுமை என்பது, தொடர்ச்சியான பேச்சுவார்த்தை தீர்வுகளைத் தருகிறது என்பதற்கான சான்றாகும் என்று கூறினார். இரு நாடுகளும் தூதரக மற்றும் ராணுவ நிலைகளில் பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டுள்ளதாகவும், சமமான மற்றும் பரஸ்பர பாதுகாப்பு கொள்கைகளின் அடிப்படையில் கள நிலைமையை மீட்டெடுப்பதற்கு விரிவான கருத்தொற்றுமை எட்டப்பட்டுள்ளதாகவும், இதுதான் தொடர்ச்சியாக நடத்தப்படும்  உரையாடலின் சக்தி என்றும் அவர் கூறினார்.

'வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான இந்தியாவின் பார்வை' என்ற தலைப்பில் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட பாதுகாப்பு அமைச்சர், 'வளர்ச்சி', 'பாதுகாப்பு' என்பவை பெரும்பாலும் தனித்தனி கண்ணோட்டங்களில் பார்க்கப்படுகின்றன. ஆனால் உண்மையில், அவை ஆழமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு பரஸ்பரம் வலுவூட்டுகின்றன என்றார்.

எந்தவொரு நாட்டின் பட்ஜெட்டிலும் கணிசமான பகுதி பாதுகாப்புக்கு ஒதுக்கப்படுகிறது என்று கூறிய  திரு ராஜ்நாத் சிங், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், தொழில்நுட்ப வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றின் மூலம் இத்துறை முக்கிய பொருளாதார பங்களிப்பை செய்கிறது என்றார்.  வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பதில் பிரதமர் திரு  நரேந்திர மோடி தலைமையிலான அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய அவர், தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே பொருளாதார வளர்ச்சி பெருகும் என்றார்.

அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட பாதுகாப்பு அமைச்சர், எல்லைப் பகுதி மேம்பாட்டின் தொலைநோக்குப் பார்வையானது பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதையும், பிராந்தியங்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதையும் அடிப்படையாகக் கொண்டது என்றார். இதனால், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

உள்நாட்டிலேயே ஆயுதங்களையும் உபகரணங்களையும் உற்பத்தி செய்வது பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது மட்டுமின்றி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் தற்சார்புக்கு வழிவகுக்கும் நிபுணத்துவத்தை மேம்படுத்துகிறது என்பதை  திரு ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பெரும்பாலும் பரந்த தேசிய வளர்ச்சிக்கு சக்திவாய்ந்த கிரியா ஊக்கிகளாக செயல்படுகின்றன என்று அவர் கூறினார்.

"தற்சார்பை நோக்கிய நமது பயணம் அந்நியமாதலை நோக்கிய ஒரு நடவடிக்கை அல்ல. மாறாக, இது உலகளாவிய சமூகத்துடன் ஒத்துழைப்பு, கூட்டாண்மை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. சர்வதேச முயற்சிகளுக்குத் திறம்பட பங்களிக்கவும், நமது நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளவும், அனைவருக்கும் பயனளிக்கும் அர்த்தமுள்ள பரிமாற்றங்களில் ஈடுபடவும் தற்சார்பு நமக்கு  உதவும்  என்று நாம்  நம்புகிறோம். ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும்   விருப்பங்களையும்  சமமாக மதிக்கும்  வலுவான, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகத்தை நாம் ஒன்றிணைந்து உருவாக்க முடியும்" என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், பசுமை முன்முயற்சி 1.0, இந்திய இராணுவத்தின் டிஜிட்டல் மயமாக்கல் 1.0 ஆகியவற்றையும் பாதுகாப்பு அமைச்சர் தொடங்கிவைத்தார்.

இரண்டு நாள் சாணக்யா பாதுகாப்பு உரையாடல் 2024 நிகழ்வில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல்,  இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த முக்கிய பேச்சாளர்கள் இடம்பெறுகின்றனர்.

சாணக்யா பாதுகாப்பு உரையாடலின்  இரண்டாவது நாள் நிகழ்வில் இஸ்ரோ தலைவர் டாக்டர் எஸ் சோமநாத் , ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தர பிரதிநிதி திருமதி ருச்சிரா காம்போஜ் ஆகியோரின் சிறப்பு உரைகளும் இடம்பெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2067822  

***

TS/SMB/AG/DL




(Release ID: 2067925) Visitor Counter : 18


Read this release in: English , Urdu , Hindi , Bengali