சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் 10 நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறவிருக்கிறது : மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா

Posted On: 20 OCT 2024 12:50PM by PIB Chennai

 

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் உலகின் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறவிருப்பதாக மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா  தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் கவுடியாரில் மேம்படுத்தப்பட்ட இந்திய விளையாட்டு ஆணையத்தின்  கோல்ஃப் மைதானத்தை அமைச்சர் இன்று திறந்து வைத்தார். திருவனந்தபுரம் கோல்ஃப் கிளப் நேசத்துக்குரிய சமூகமாகவும், விளையாட்டின் சிறந்த அடையாளமாகவும் உள்ள முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

2036ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் நாட்டில் உள்ள விளையாட்டுத் திறமைகளை வளர்க்கும் என்றும் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார். ஆரோக்கியமான மக்கள் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவார்கள், ஆரோக்கியமான சமுதாயம் செல்வவள சமூகமாக மாறும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். விளையாட்டுகள் மக்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் ஆரோக்கியமாக மாற்றும். இதை மனதில் வைத்து, கேலோ இந்தியா திட்டத்தை   மாவட்ட அளவிலிருந்து செயல்படுத்துகிறோம் என்று அவர் கூறினார்.

கேரளாவில் முதன்முறையாக இந்திய விளையாட்டு ஆணையம்  தேசிய கோல்ஃப் அகாடமியை நிறுவியதற்கு  மத்திய அமைச்சர் மிகுந்த பெருமை தெரிவித்தார். தேசிய கோல்ஃப் அகாடமி, ஒன்பது துளைகள் கொண்ட சர்வதேச-தரத்திலான கோல்ஃப் மைதானம், அதிநவீன உடற்பயிற்சி மையம், நவீன பொழுதுபோக்கு வசதிகள் போன்ற உலகத் தரம் வாய்ந்த வசதிகளைக் கொண்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட கோல்ஃப் மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர், கோல்ஃப் விளையாடினார்.  2017, மார்ச் 31  அன்று விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, சுற்றுலா அமைச்சகத்தின் ஒப்புதலுடன் மேம்படுத்தப்பட்ட கோல்ஃப் மைதானம் நிறுவப்பட்டது. லட்சுமிபாய் தேசிய உடற்பயிற்சி கல்லூரிக்கு ரூ. 9.27 கோடி வழங்கப்பட்டது, மேலும் மத்திய பொதுப்பணித் துறை  இந்த லட்சியத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, சர்வதேச அளவுகோல்களை அடைய கிளபின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

நிகழ்வின் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விளையாட்டு வீரர்களை டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டினார். சுற்றுலாத்துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி தலைமை தாங்கினார். கூட்டத்தில் உரையாற்றிய இணையமைச்சர் திருவனந்தபுரத்தின் கோல்ஃப் கிளப் மற்றும் டென்னிஸ் கிளப் சமூகத்தின் அடித்தளத்திலிருந்து  உண்மையான திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது என்றார்.

கேரள அரசின் தலைமைச் செயலாளர் திருமதி சாரதா முரளீதரன், மத்திய   சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு சுமன் பில்லா, இந்திய விளையாட்டு ஆணையத்தின் திருவனந்தபுரம் கோல்ஃப் கிளப் செயலாளர் திரு எஸ்.என். ரகுச்சந்திரன் நாயர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

******

SMB/ KV

 

 

 

 



(Release ID: 2066512) Visitor Counter : 30


Read this release in: English , Hindi , Malayalam