ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அனைத்து ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் 11% வளர்ச்சியுடன், இந்தியாவின் ஜவுளித் துறை 2030-ம் ஆண்டில் 350 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வளர்ச்சி அடையும்

Posted On: 10 OCT 2024 4:02PM by PIB Chennai

2024 ஆகஸ்ட்  மாத வர்த்தக தரவுகளின்படி, அனைத்து ஆயத்த ஆடை ஏற்றுமதியில் ஆண்டுக்கு 11% வளர்ச்சியுடன், இந்தியாவின் ஜவுளித் துறை குறிப்பிடத்தக்க விரிவாக்கத்திற்கு தயாராக உள்ளது. இது ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கிறது. இந்தியாவின் உள்ளார்ந்த வலிமை, முதலீடு மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வலுவான கொள்கை கட்டமைப்பு ஆகியவற்றால் உந்தப்பட்டு நாட்டின் ஜவுளித் துறை 2030-ம் ஆண்டில் 350 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதிப்புச் சங்கிலி திறன், வலுவான மூலப்பொருள் அடித்தளம், பெரிய ஏற்றுமதி தடம், எழுச்சியுடன், வேகமாக விரிவடைந்து வரும் உள்நாட்டு சந்தை ஆகியவற்றுடன், இந்தியா ஜவுளித் துறையில் ஒரு பாரம்பரியமான முன்னணி நாடாகத் திகழ்கிறது. பல முதலீட்டு முடிவுகள் குறித்த ஊக்கமளிக்கும் தகவல்கள் வந்துகொண்டிருப்பது, ஜவுளித்துறைக்கு ஆரோக்கியமான அறிகுறிகளாக கருதப்படுகிறது.

2030-ம் ஆண்டுக்குள் ஜவுளித் துறை 350 பில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை அடைய உதவும் வகையில் இந்த உள்ளார்ந்த வலிமையை மேம்படுத்துவதும், ஊக்குவிப்பதும் அரசின் செயல்திட்டமாகும். இதன் ஒரு பகுதியாக பல திட்டங்கள் மற்றும் கொள்கை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில், உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் (பிஎல்ஐ திட்டம்) மற்றும் பிரதமரின் பிஎம் மித்ரா பூங்கா, (பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்தியம் மற்றும் ஆடை பூங்கா) ஆகியவற்றின் மூலம், ரூ.90,000 கோடிக்கும் அதிகமான முதலீடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் போன்ற திட்டங்கள் தொழில்நுட்ப ஜவுளி போன்ற வளர்ந்து வரும் துறைகளில் இந்தியா தலைமை நிலையை அடைய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம், மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் பிரதமர் திரு நரேந்திர மோடி, பிஎம் மித்ரா பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்ட 7 பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும். உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், ஜவுளி உற்பத்தி, முதலீடு மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதில் பிஎம் மித்ரா பூங்காக்கள் பெரும் பங்களிக்கும். ஒவ்வொரு பூங்காவும் கட்டி முடிக்கப்படும்போது,
ரூ .10,000 கோடி முதலீட்டை ஈர்ப்பதுடன், சுமார் 1 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளையும், 2 லட்சம் மறைமுக வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் ரூ.28,000 கோடிக்கும் அதிகமான முதலீடு, ரூ.2,00,000 கோடிக்கும் அதிகமான விற்றுமுதல், சுமார் 2.5 லட்சம் வேலைவாய்ப்புகளுடன் பி.எல். திட்டம், மனிதர்களால் உருவாக்கப்படும் நூலைக் கொண்டு தயாரிக்கப்படும் துணிகள், ஆடைகள், மற்றும் தொழில்நுட்ப ஜவுளி தயாரிப்புகளின் உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் என்பது நாட்டின் பல்வேறு முன்னோடி இயக்கங்கள் மற்றும் திட்டங்களில் தொழில்நுட்ப ஜவுளிகளின் பயன்பாட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் சிறப்பு இயக்கமாகும். சிறப்பு இழைகள், வேளாண்துறை ஜவுளிகள், பாதுகாப்புத்துறை ஜவுளிகள், மருத்துவத்துறை ஜவுளிகள், விளையாட்டுத்துறை ஜவுளிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஜவுளிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆராய்ச்சி திட்டங்களை இந்த இயக்கம் ஊக்குவிக்கிறது.

ஜவுளித் துறையில் அதிக வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள பல மாநிலங்களின் கொள்கை முன்முயற்சிகளும் மத்திய அளவில் ஆதரவான கொள்கைக் கட்டமைப்பிற்கு துணைபுரிகின்றன.

***

(Release ID: 2063835)

PKV/AG/RR



(Release ID: 2063869) Visitor Counter : 36


Read this release in: English , Urdu , Hindi , Marathi