அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

ஹைட்ரஜன் எரிசக்தியை வணிகமயமாக்கலின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து நிபுணர்கள் விவாதித்தனர்

Posted On: 10 OCT 2024 1:39PM by PIB Chennai

பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில்முனைவோர், வணிக ஆர்வலர்கள் ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதற்கான தொடக்க சுற்றுச்சூழல் அமைப்புகளை வளர்ப்பது குறித்த பயிலரங்கில் ஹைட்ரஜன் எரிசக்தி வணிகமயமாக்கலின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர்.

2024, அக்டோபர் 8 அன்று தேசிய ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல் தினத்தை முன்னிட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) தன்னாட்சி நிறுவனமான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையம் (ஏஆர்சிஐ) ஏற்பாடு செய்திருந்த பயிலரங்கில் கௌரவ விருந்தினராக பங்கேற்ற ஏஆர்சிஐ இயக்குநர் டாக்டர் ஆர்.விஜய் பேசுகையில், ஹைட்ரஜன் உற்பத்தி செலவைக் குறைப்பதன் முக்கியத்துவத்தை ஏஆர்சிஐ இயக்குநர் வலியுறுத்தினார்.

கூறு மட்டத்திலும் ஒருங்கிணைந்த அமைப்புகள் மூலமாகவும் ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை மாற்றுவதில் ஏஆர்சிஐ-ன் பங்கையும் அவர் எடுத்துரைத்தார், மேலும் எரிசக்தி துறையில் பல தொடக்க நிறுவனங்களுக்கு ஏஆர்சிஐ ஆதரவளித்து வருவதாகவும் கூறினார்.

சென்னை ஐஐடிஎம் ஆராய்ச்சி பூங்காவில் உள்ள தூள் உலோகவியல் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் (ஏஆர்சிஐ) எரிபொருள் செல் தொழில்நுட்ப மையத்தில், தொடர்ந்து 7-வது வருடாந்திர ஹைட்ரஜன் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொடக்க உரையாற்றிய, தேசிய சூரிய எரிசக்தி நிறுவனத்தின் (என்ஐஎஸ்இ) தலைமை இயக்குநர் பேராசிரியர் முகமது ரிஹான் எரிசக்தி சேமிப்பு மற்றும் எரிபொருள் செல்கள் மூலம் மின்சாரமாக மாற்றுவதற்காக, பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்காக சூரிய சக்தியை எலக்ட்ரோலைசருடன் ஒருங்கிணைக்கும் இயக்கம்-பயன்முறை அணுகுமுறையை எடுத்துரைத்தார். சூரிய ஆற்றல் மற்றும் ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை சுட்டிக்காட்டிய அவர், பசுமை எரிசக்தியை நோக்கிய நிலையான பாதையை காட்டினார். மேற்கண்ட அணுகுமுறையை நனவாக்குவதற்காக, கூட்டாக பணியாற்ற ஏஆர்சிஐ மற்றும் என்ஐஎஸ்இ, ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை ஏ.ஆர்.சி.ஐ.யின் முன்னாள் பிராந்திய இயக்குநர், முனைவர் இரா.கோபாலன் பேசுகையில், செலவுகளை மேலும் குறைக்க ஹைட்ரஜன் உற்பத்தியில் ஒரு சுற்றுப் பொருளாதாரத்தின் அவசியத்தை வலியுறுத்தியதுடன் மற்ற வளர்ந்த நாடுகளுடன் பசுமை அம்மோனியா தொகுப்பில் இந்தியாவின் வளர்ந்து வரும் தலைமையை எடுத்துரைத்தார்.

திருச்சிராப்பள்ளி பாரத மிகுமின் ஆலையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி.ஏ. பதஞ்சலி போன்ற புகழ்பெற்ற பேச்சாளர்கள் திரு. அசோக் லேலண்டின் மூத்த துணைத் தலைவர் கிருஷ்ணன் சடகோபன் மற்றும் குளோபல் ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் சென்டரின் (ஜிஏஆர்சி) இயக்குநர் டாக்டர் ராமதாஸ் ஆறுமுகம் சகுந்தலை ஆகியோர், இந்திய வாகன சந்தையில் ஹைட்ரஜனின் முக்கியப் பங்கு குறித்து விவாதித்தனர். போக்குவரத்தில் ஹைட்ரஜனின் பயன்பாடு மற்றும் இந்தத் துறையில் வளர்ச்சிக்கான சவால்கள் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

பல புத்தொழில் நிறுவனர்கள் மற்றும் பிரதிநிதிகள், ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் பயன்பாடு குறித்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர், அவர்களின் திறன்கள் மற்றும் அவர்களின் தொழில்நுட்பங்களை அளவிடுவதில், அவர்கள் எதிர்கொள்ளும் தடைகள் குறித்து விவாதித்தனர். செலவு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை தடைகள் போன்ற முக்கிய சவால்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. ஹைட்ரஜனை பொருளாதார ரீதியாக மிகவும் சாத்தியமாக்க, உற்பத்தி மற்றும் விநியோக செலவுகளைக் குறைப்பதற்கான உத்திகளை பங்கேற்பாளர்கள் விவாதித்தனர்.

தொழில், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் அவசியத்தை இந்தப் பயிலரங்கு சுட்டிக் காட்டியது, இந்த கூட்டாண்மைகளை வளர்ப்பதில், ஏஆர்சிஐ முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் ஹைட்ரஜன் பொருளாதாரத்தை அடைய இந்த ஒத்துழைப்பு அவசியம் என்று கருதப்படுகிறது.

இந்த ஆண்டு பயிலரங்கு தேசிய ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல் தினத்தை கொண்டாடியதோடு மட்டுமல்லாமல், பசுமை எரிசக்தி எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையையும் குறித்தது. இந்த நிகழ்வின் போது பகிரப்பட்ட விவாதங்கள் மற்றும் நுண்ணறிவுகள், உலகளாவிய எரிசக்தி நிலவரத்தை மாற்றியமைக்கக்கூடிய ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும்.

****

(Release ID: 2063774)

MM/KPG/KR

 



(Release ID: 2063822) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Hindi