அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
குறைந்த விலையிலான, உயர்தர மருந்துகளுக்கான மையமாக இந்தியா உருவெடுத்திருப்பது பாராட்டத்தக்கது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
09 OCT 2024 3:33PM by PIB Chennai
இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்கள் மீதான நமது சார்புநிலையை குறைப்பதில் "இந்தியாவில் தயாரிப்போம்" முன்முயற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதன் மூலம், தற்சார்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், முக்கியமான மருந்துப் பொருட்கள் உடனடியாகக் கிடைப்பதையும் உறுதி செய்கிறோம். இதை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, (தனிப்பொறுப்பு), புவி அறிவியல்துறை, (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
6-வது இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மருந்து மற்றும் வாழ்க்கை அறிவியல் உச்சி மாநாடு, 2024-ல் அவர் கலந்துகொண்டு பேசினார். "தொழில்துறை தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களிடையே கருத்துப் பரிமாற்றத்திற்கான இந்த மன்றம் ஒரு முக்கிய தளமாகும். மேலும், உலகளாவிய மருந்து மற்றும் உயிரி தொழில்நுட்ப அரங்கங்களில் வழிநடத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது" என்று அமைச்சர் கூறினார்.
மருந்துத் துறையைப் பாராட்டிய அவர், "குறைந்த விலையிலான, உயர்தர மருந்துகளுக்கான மையமாக இந்தியா உருவெடுத்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. நாம் இப்போது மருந்து உற்பத்தியில் 3-வது இடத்திலும், மதிப்பின் அடிப்படையில் 14-வது இடத்திலும் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
அடுத்த தொழில் புரட்சி பற்றி பேசிய அமைச்சர், அது உயிரி தொழில்நுட்பத் துறையில் ஏற்படும் என்றார். அதற்கு நாம் தலைமை தாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் போன்ற முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார் அவர், 2030-ம் ஆண்டில் உயிரி மருந்துகள், உயிரி உற்பத்தி மற்றும் வாழ்க்கை அறிவியல் ஆகியவற்றில் உலகளாவிய தலைவராக இந்தியா முன்னேறி செல்கிறது என்று தெரவித்தார். இருப்பினும், இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. வெற்றிக்காக சிஐஐ மற்றும் வாழ்க்கை அறிவியல் துறையை நான் பாராட்டுகிறேன், ஆனால் நமக்கு முன்னால் உள்ள அபரிமிதமான வாய்ப்புகளை நாம் மறந்துவிடக் கூடாது என்று அவர் மேலும் கூறினார்.
உலகளவில் நுகரப்படும் ஒவ்வொரு மூன்றாவது மாத்திரையும் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. அனைத்து இந்திய மாநிலங்களிலிருந்தும் 48,000 மருந்து மாதிரிகளில் சமீபத்திய மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய ஆய்வில், போலி மருந்து நிகழ்வுகள் வெறும் 0.0245% மட்டுமே இருப்பது தெரியவந்தது. எவ்வாறாயினும், பொருட்கள் பல்வேறு பருவ நிலை பிராந்தியங்களில் பயணிப்பதால், மருந்து தயாரிப்புகளை கொண்டு செல்வதற்கான உள்கட்டமைப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவது அவற்றின் செயல்திறனை உறுதிப்படுத்த முக்கியமானது என்று கூறினார்.
கோவிட்-19 க்கான உலகின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி உருவாக்கம் மற்றும் இளம் பெண்களுக்கான முதல் மனித பாப்பிலோமா வைரஸ் (எச்.பி.வி) தடுப்பூசியை உருவாக்கும் முயற்சிகள் மூலம் உலகளாவிய சுகாதாரத்தில் இந்தியாவின் தலைமை எடுத்துக்காட்டப்படுகிறது. இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும். மேலும், உலகின் 65% தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் இந்தியா, சுகாதார பணிகளை, குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு கணிசமாக அளித்துள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2063474
***
IR/RS/KR/DL
(Release ID: 2063557)
Visitor Counter : 48