சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய சுகாதார கணக்கு தொடர்பான மதிப்பீடுகள் 2020-21, 2021-22 குறித்த ஒரு விரிவான கண்ணோட்டம்

Posted On: 04 OCT 2024 12:14PM by PIB Chennai

மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகம் அண்மையில் 2020-21, 2021-22 ஆகிய நிதியாண்டுகளுக்கான, தேசிய சுகாதார கணக்கு (NHA) மதிப்பீடுகளை வெளியிட்டது. இந்த அறிக்கைகள் தேசிய சுகாதார கணக்கு வரிசைத் தொடரின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது பதிப்புகள் ஆகும். இது நாட்டின் சுகாதார செலவினங்கள் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது. இந்த ஆவணம் தேசிய சுகாதார கணக்கு மதிப்பீடுகளின் முக்கிய அம்சங்களை ஆராய்கிறது. சுகாதாரத்திற்கென அரசு மேற்கொள்ளும் செலவினங்கள் போன்ற குறிப்பிடத்தக்க தகவல்களை எடுத்துக்காட்டுகிறது.

உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை அடைவதை நோக்கிய தனது பயணத்தில் இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த அறிக்கைத் தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன.

2020-21, 2021-22 ஆகிய ஆண்டுகளுக்கான தேசிய சுகாதார கணக்கு மதிப்பீடுகளின் முக்கிய தகவல்கள்:

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசின் சுகாதார செலவினத்தின் பங்கு 2014-15-ல் 1.13% ஆக இருந்தது. இது 2021-22-ல் 1.84% ஆக அதிகரித்துள்ளது.

பொது அரசு செலவினத்தைப் பொறுத்தவரை, 2014-15-ல் 3.94% ஆக இருந்த நிலையில், 2021-22-ல் 6.12% ஆக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி பொது சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக கொவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட சவால்கள் சிறப்பாக எதிர்கொள்ளப்பட்டன.

2020-21-ம் ஆண்டில் மொத்த சுகாதார செலவினம்: இந்தியாவின் மொத்த சுகாதார செலவினம் 7,39,327 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.73% ஆகும். 2020-21-ம் ஆண்டில் தனிநபர் செலவு ரூ.5,436 ஆகும்.

அரசின் சுகாதார செலவுகள்  நிலையாக அதிகரித்து வருவது மக்களுக்கு பல நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

மக்களின் நிதி சிரமங்கள் குறைந்துள்ளன.

பொது சுகாதார சேவைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன

உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை நோக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தேசிய சுகாதார கணக்கு  மதிப்பீடுகள் சிஸ்டம் ஆஃப் ஹெல்த் அக்கவுண்ட்ஸ் 2011 எனப்படும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்பின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளன. நாடுகளுக்கிடையேயான ஒப்பீடுகளை செயல்படுத்துவதற்கு இந்த கட்டமைப்பு அவசியம், ஏனெனில் இது சுகாதார செலவினங்களைக் கண்காணிக்கவும் அறிக்கையாகத் தயாரிக்கவும்  ஒரு தரப்படுத்தப்பட்ட வழிமுறையை வழங்குகிறது.

2020-21, 2021-22 ஆகிய ஆண்டுகளுக்கான தேசிய சுகாதார கணக்கு மதிப்பீடுகள் இந்தியாவின் சுகாதார செலவின முறைகள், பொது சுகாதாரத்தில் அரசின் அதிகரித்த முதலீடுகள் பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வழங்குகின்றன. அரசின் சுகாதாரமு தொடர்பான  செலவினங்களில் நிலையான உயர்வு, உள்ளடக்கிய சுகாதார அமைப்பை சுட்டிக்காட்டுகின்றன.

பொது சுகாதாரத்திற்கு இந்தியா தொடர்ந்து முன்னுரிமை அளித்து வரும் நிலையில், இந்த மதிப்பீடுகள் நிதி தடைகளை குறைப்பதற்கும், சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை அடைவதை நோக்கி நகர்வதற்கும் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எடுத்துக்காட்டுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2061887

----

PLM/KPG/KR


(Release ID: 2061964) Visitor Counter : 83