மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் நடைபெற்ற தேசிய  இணையக் கருத்தரங்கிற்கு  மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா தலைமை தாங்கினார்

Posted On: 28 SEP 2024 6:21PM by PIB Chennai

 

உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் நேற்று நடைபெற்ற தேசிய இணையக் கருத்தரங்கிற்கு  மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா தலைமை வகித்தார்.

கால்நடை பராமரிப்புத்துறை  ஆணையர் டாக்டர் அபிஜித் மித்ரா, இணைச் செயலாளர் (கால்நடை சுகாதாரம்) திருமதி சரிதா சவுகான், இணைச் செயலாளர் (ஜி.சி/பி.சி/நிர்வாகம்) திருமதி சுபர்ணா பச்செளரி மற்றும் துறையின் தொழில்நுட்ப அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். நாடு முழுவதும் உள்ள  மாநில கால்நடை துறைகள், கால்நடை பல்கலைக்கழகங்கள், விலங்குகள் நல வாரியங்கள் மற்றும் விலங்குகள் நல தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலிருந்து 1000 க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் இணையக் கருத்தரங்கில்  இணைந்தனர்.

 நாய்கள் மூலமான ரேபிஸைக் கட்டுப்படுத்தவும்  நாட்டிலிருந்து இந்நோயை அகற்றவும் சிறந்த முயற்சிகளை மேற்கொள்ள பங்கேற்பாளர்களும் அனைத்துப் பங்குதாரர்களும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று திருமதி உபாத்யாயா தலைமை உரையில் கேட்டுக்கொண்டார். கிடைக்கக்கூடிய சிறந்த தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களை கூட்டு வழியில் பயன்படுத்துவதன் மூலம் கொடிய ரேபிஸ் வைரஸை தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாய்களுக்கு தடுப்பூசி போடுவதில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் முக்கிய பங்கினை சுட்டிக்காட்டிய செயலர், வெறிநாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்த எம்டிவி எனப்படும் பெருந்திரள் நாய் தடுப்பூசி மிகவும் செலவு குறைந்த முறையாகும் என்பதால், தடுப்பூசி போடுவதை முறைப்படுத்தவும், தொடர்ந்து கண்காணிக்கவும் நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒரு பயிலரங்கை நடத்த ஆலோசனை கூறினார்.

ரேபிஸ் தொற்றைக் கட்டுப்படுத்தவும், நிர்வகிக்கவும், தடுக்கவும் நாய்களுக்கு பெருமளவில் தடுப்பூசி போடுவதும், நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதும் சமமாக முக்கியத்துவம் வாய்ந்தது என்று டாக்டர் அபிஜித் மித்ரா கூறினார். இருப்பினும் , தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ரேபிஸ் கட்டுப்பாட்டுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது என்றும், மாநில கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் அவசியமானவை என்றும் அவர் தெரிவித்தார்.

கர்நாடக கால்நடை மருத்துவம், விலங்கு மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையைச் சேர்ந்த டாக்டர் சாரதா, ரேபிஸ் நோயறிதல் குறித்த விளக்கக்காட்சியை வழங்கினார். கோவா, கேரளா மற்றும் சிக்கிம் மாநில கால்நடை பராமரிப்புத் துறைகள்  வெறிநாய்க்கடி நோய் ஒழிப்பு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த செயல்முறை விளக்கங்களை அளித்தன.

*****

SMB/KV

 

 


(Release ID: 2059889) Visitor Counter : 53


Read this release in: English , Urdu , Hindi , Punjabi