ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய பட்டு வாரியத்தின் பவள விழாவைக் கொண்டாடும் வகையில் நினைவு நாணயத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் வெளியிட்டார்

Posted On: 25 SEP 2024 6:23PM by PIB Chennai

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், மத்திய பட்டு வாரியத்தின் (CSB) பவள விழாவைக் கொண்டாடும் வகையில் நினைவு நாணயத்தை 20 செப்டம்பர் 2024 அன்று மைசூருவில் வெளியிட்டார். மத்திய பட்டு வாரியம் இந்தியாவின் பட்டுத் தொழிலை மேம்படுத்துவதற்கான 75 ஆண்டுகால அர்ப்பணிப்பு சேவையை பெருமையுடன் குறித்துள்ளது.

இந்தக் கொண்டாட்டங்களில் மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகு துறை அமைச்சர் திரு எச்.டி.குமாரசாமி உட்பட பல பிரமுகர்கள் பங்கேற்றனர்; வெளியுறவுத் துறை மற்றும் ஜவுளித் துறை இணையமைச்சர் திரு. பபித்ரா மார்கெரிட்டா, ஜவுளி அமைச்சகத்தின் செயலாளர் திருமதி ரச்னா ஷா; கால்நடை பராமரிப்பு மற்றும் பட்டு வளர்ச்சித் துறை அமைச்சர், கர்நாடக திரு கே.வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மத்திய பட்டு வாரியத்தின் 75 ஆண்டுகால பயணத்தை நினைவுகூரும் நிகழ்வுகளின் போது, பல குறிப்பிடத்தக்க வெளியீடுகள் வெளியிடப்பட்டன. CSB-ன் வரலாற்றைக் காட்டும் ஒரு ஆவணப்பட வீடியோ வெளியிடப்பட்டது. பவள விழாவைக் கொண்டாடும் வகையில், நினைவு நாணயம் மற்றும் 1949 முதல் தேசத்தின் சேவையில் சிஎஸ்பி என்ற காபி டேபிள் புத்தகம் ஆகியவை வெளியிடப்பட்டன. சிஎஸ்பி 75 ஆண்டுகள் லோகோவைக் கொண்ட அஞ்சல் அட்டையும் வெளியிடப்பட்டது. கூடுதலாக, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவிற்கான புதிய மல்பெரி வகைகள் மற்றும் பட்டுப்புழு கலப்பினங்கள் பட்டு உற்பத்தியை அதிகரிக்க அறிமுகப்படுத்தப்பட்டன. நிர்மூல், செரி-வின், மிஸ்டர் ப்ரோ மற்றும் ஒரு பொறி இயந்திரம் ஆகிய நான்கு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் 13 புத்தகங்கள், 3 கையேடுகள் மற்றும் பட்டு வளர்ப்புக்கு அர்ப்பணிக்கப்பட்ட 1 இந்தி பத்திரிகை ஆகியவை வெளியிடப்பட்டன. சில்க் மார்க் இந்தியா  இணையதளம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

புதிய மல்பெரி வகைகள் மற்றும் பட்டுப்புழு கலப்பினங்களை அறிமுகப்படுத்துவது பட்டு உற்பத்தியை அதிகரிக்க, குறிப்பாக கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் முக்கியமானது, இதன் மூலம் உற்பத்தி பகுதிகளை பன்முகப்படுத்துதல் மற்றும் பிராந்திய சார்புநிலையை குறைக்கிறது. கூடுதலாக, நிர்மூல் மற்றும் செரி-வின் போன்ற புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது பூச்சி மேலாண்மை, நிலையான நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரித்தல் போன்ற முக்கியமான சவால்களை எதிர்கொள்கிறது.

இந்த நிகழ்வின் போது வெளியிடப்பட்ட கல்வி ஆதாரங்கள் விவசாயிகளுக்கு அத்தியாவசிய அறிவை மேம்படுத்தும், அதே நேரத்தில் ஐ.சி.ஏ.ஆர்-சி.எஃப்.ஆர்.ஐ மற்றும் ஜெயின் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கூட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி முயற்சிகளுக்கு உதவுகின்றன. பட்டு விவசாயிகளுக்கு உள்கட்டமைப்பு, சந்தை அணுகல் மற்றும் வளங்கள் கிடைப்பதை மேம்படுத்துவதற்கான இந்த உத்திபூர்வ அணுகுமுறை, அவர்களின் வளர்ச்சிக்கு ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறது, இறுதியில் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதையும், உலகளாவிய பட்டு சந்தையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பட்டுத் துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்கள் மற்றும் துணை தயாரிப்பு உற்பத்தியாளர்களை ஒன்றிணைக்கும் இரண்டு நாள் கொண்டாட்டங்களின் போது பட்டு பங்குதாரர்களின் அனுபவ பகிர்வு அமர்வும் நடைபெற்றது. பட்டுத் தொழிலின் தற்போதைய நிலை குறித்து பங்கேற்பாளர்கள் கலந்துரையாடவும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த அமர்வு ஒரு தளத்தை வழங்கியது. கால்நடை தீவனம், மருந்துகள் மற்றும் மருத்துவ பயன்பாடுகளில் பட்டுப்புழு வளர்ப்பு கழிவுகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு தளத்தை உருவாக்குவது உட்பட பல முக்கிய பரிந்துரைகள் விவாதங்களில் இருந்து வெளிவந்தன.

பட்டுப்புழு வளர்ப்பு மாநிலங்களில் சந்தை வசதிகளை வலுப்படுத்தி, பட்டுக்கூடு விலையை நிலைப்படுத்தி, இடைத்தரகர்களின் செல்வாக்கை குறைத்து, விவசாயிகளின் லாபத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். பட்டுப்புழு வளர்ப்பு கூறுகளுக்கு மானியங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், சந்தை பணவீக்கத்திற்கு ஏற்ப அலகு செலவுகளை சரிசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பட்டுத் தொழிலின் வளர்ச்சியை ஆராய்வதற்காக 1945 மார்ச் 8 ஆம் தேதி பிரிட்டிஷ் அரசால் பட்டுப் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய பட்டு வாரியம் அமைக்கப்பட்டது, சுதந்திர இந்திய அரசு 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி பட்டு வாரியச் சட்டம் 1948 ஐ இயற்றியது. அதன்படி, 1948-ம் ஆண்டு நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் பட்டு வளர்ப்புத் தொழிலை வடிவமைக்க மத்திய பட்டு வாரியம் ஒரு சட்டப்பூர்வ அமைப்பை 1949 ஏப்ரல் 9 அன்று அமைத்தது.

மத்திய பட்டு வாரியம் விரிவான பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஒரே அமைப்பாகும் மற்றும் 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் வளர்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைக்கிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நான்கடுக்கு பட்டுப்புழு விதை உற்பத்தி வலையமைப்பை பராமரித்தல், வணிக ரீதியிலான பட்டுப்புழு குஞ்சு உற்பத்தியில் பல்வேறு உற்பத்தி முறைகளில் தர அளவீடுகளை ஏற்படுத்துதல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் பட்டுத் தொழில் தொடர்பான அனைத்து இனங்களிலும் அரசுக்கு ஆலோசனை வழங்குதல் ஆகியவை மத்திய பட்டு வாரியத்தின் முக்கிய செயல்பாடுகளாகும். மத்திய பட்டு வாரியத்தின் இந்த முக்கிய பணிகளை பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள 159 பட்டு வாரிய அலகுகள் மேற்கொண்டு வருகின்றன.

பட்டு வாரியத்தின ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் வெவ்வேறு பகுதிகள் மற்றும் பருவங்களுக்கு ஏற்ப 51 க்கும் மேற்பட்ட பட்டுப்புழு கலப்பினங்கள், 20 அதிக மகசூல் தரும் தாவரங்கள் மற்றும் 68-க்கும் மேற்பட்ட காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. பட்டு வாரிதய்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சியின் காரணமாக, நாடு உள்நாட்டு தானியங்கி ரீலிங் இயந்திரங்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. அவை முன்பு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இந்த முன்னேற்றங்கள் பட்டு உற்பத்தியை மேம்படுத்தவும், விவசாயிகள் மற்றும் பங்குதாரர்களுக்கு தரம் மற்றும் மகசூலை அதிகரிக்க மதிப்புமிக்க கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கவும் உதவுகின்றன.

மத்திய பட்டு வாரியத்தின் உருமாற்ற முயற்சிகள் மூலம், பட்டுத் தொழிலில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. நாடு இப்போது உலகளவில் இரண்டாவது பெரிய பட்டு உற்பத்தியாளராக உள்ளது, உலகளாவிய உற்பத்தியில் 1949-ல் 6% -ஆக இருந்த அதன் பங்குஈ  2023-ல் 42% ஆக உயர்ந்துள்ளது. 1949-ல் 1,242 மெட்ரிக் டன்னாக இருந்த கச்சாப்பட்டு உற்பத்தி 2023-24-ல் 38,913 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. 1949–ம் ஆண்டில் 17 ஆக இருந்த ரெண்டிட்டா 2023-24 ஆம் ஆண்டில் 6.47 ஆக குறைந்துள்ளதாலும், மல்பெரி தோட்டங்களின் ஹெக்டேருக்கு உற்பத்தித்திறன் 15 கிலோவிலிருந்து 110 கிலோவாக உயர்ந்துள்ளதாலும் செயல்திறன் மேம்பாடுகள் தெளிவாகத் தெரிகிறது. மேலும், பட்டு ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது, வருவாய் 1949-50 -ல் 0.41 கோடியிலிருந்து 2023-24 -ல் 2,028 கோடியாக அதிகரித்து 80-க்கும் மேற்பட்ட நாடுகளை அடைந்துள்ளது.

---------------

PKV/RS/KV


(Release ID: 2058916) Visitor Counter : 47


Read this release in: English , Urdu , Hindi