வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஆஸ்திரேலிய பயணத்தின் இரண்டாம் நாளான இன்று இந்திய ரியல் எஸ்டேட் சங்க கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்றார்
Posted On:
24 SEP 2024 6:07PM by PIB Chennai
2024 செப்டம்பர் 23 முதல் 26 வரை ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தில், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இரண்டாவது நாளில் (செப்டம்பர் 24) பல பயனுள்ள ஈடுபாடுகளை மேற்கொண்டார். சிட்னியில் நடைபெற்ற இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பின் (கிரெடாய்) 22 வது தேசிய மாநாட்டில் அவர் தலைமை விருந்தினராக இருந்தார். இந்த மாநாடு இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சுமார் 1100 ரியல் எஸ்டேட் வர்த்தகர்களை ஒன்றிணைத்தது.
அப்போது பேசிய அமைச்சர், ரியல் எஸ்டேட் துறையில் பணிபுரியும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக இன்னும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ரியல் எஸ்டேட் துறையினரை வலியுறுத்தினார். இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ரியல் எஸ்டேட் துறையின் பங்களிப்பைப் பாராட்டிய அவர், ஆஸ்திரேலியா போன்ற சர்வதேச சந்தைகளில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு அவர்களை ஊக்குவித்தார்.
நியூ சவுத் வேல்ஸ் தலைவர் கிறிஸ் மின்ஸ்-ஐ, நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் சந்தித்த அமைச்சர், இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே வளர்ந்து வரும் வர்த்தக மற்றும் சமூக தொடர்புகள் குறித்தும், இந்த உறவுகளில் நியூ சவுத் வேல்ஸின் பங்களிப்பு குறித்தும் விவாதித்தார்.
ஆசிய தொடர்பு வர்த்தகம், ஆஸ்திரேலியா இந்திய மையம் ஏற்பாடு செய்திருந்த இருதரப்பு பொருளாதார உறவுகளில் பல்வேறு முக்கிய பங்குதாரர்களிடையே அமைச்சர் உரையாற்றினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், கட்டமைப்பு, கல்வி, முக்கிய கனிமங்கள், சுற்றுலா, நிதி தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், விண்வெளி போன்ற முக்கிய துறைகளில் இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து விவாதங்கள் நடைபெற்றன. இந்திய சந்தை அளிக்கும் பரந்த வாய்ப்புகளை ஆஸ்திரேலிய வர்த்தகர்கள் பயன்படுத்திக் கொள்ள உதவும் 'இந்தியாவில் வர்த்தகம் செய்தல்' என்ற அறிக்கையின் நகல் அமைச்சருக்கு வழங்கப்பட்டது.
இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் ஆஸ்திரேலிய (சிட்னி) பிரிவு குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்த பாலமாக செயல்படுமாறு அவர்களை ஊக்குவித்தார்.
முற்பகலில், இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் கூட்டத்தில் அமைச்சர் மெய்நிகர் முறையில் பங்கேற்றார்.
வணிக மற்றும் சமூக தொடர்புகளை மையமாகக் கொண்ட சிட்னிக்கான தனது 2 நாள் பயணத்தை நிறைவு செய்த பின்னர், அமைச்சர் அடிலெய்டுக்குச் சென்றார். அங்கு அவர் செப்டம்பர் 25, 2024 அன்று திட்டமிடப்பட்டுள்ள 19 வது கூட்டு அமைச்சர்கள் ஆணையக் கூட்டத்திற்கு ஆஸ்திரேலியாவின் வர்த்தக மற்றும் சுற்றுலா அமைச்சர் செனட்டர் திரு டான் ஃபாரெலுடன் இணைத் தலைமை தாங்குவார்.
----
IR/KPG/DL
(Release ID: 2058364)
Visitor Counter : 35