வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வளத்திற்கான இந்தியா-பசிஃபிக் பொருளாதார கட்டமைப்பின் அமைச்சர்கள் நிலை கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு
Posted On:
24 SEP 2024 3:47PM by PIB Chennai
வழங்கல் தொடர் நெகிழ் திறன், தூய்மைப் பொருளாதாரம், நியாயமான பொருளாதாரம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதற்காக இணைய வழியில் நடத்தப்பட்ட 3-வது இந்தியா-பசிஃபிக் பொருளாதார கட்டமைப்பின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்றார்.
2024 அக்டோபர் 11, 2024 அக்டோபர் 12, 2024 அக்டோபர் 11 ஆகிய தேதிகளில் முறையே தூய்மைப் பொருளாதார ஒப்பந்தம், நியாயப் பொருளாதார ஒப்பந்தம், விரிவுபடுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகியவை அமலுக்கு வருவதை திரு பியூஷ் கோயலும் இவருடன் பங்கேற்ற இதர 13 அமைச்சர்களும் வரவேற்றனர். நடைமுறையில் உள்ள ஒருங்கிணைப்பின் மூலம் இந்த ஒப்பந்தங்கள் காரணமாக, பொருளாதார ஒத்துழைப்பு மேலும் ஆழமாவதுடன், வலுவான பயன்களும் கிடைப்பதற்கு குறிப்பிடத்தக்க வாய்ப்பாக இது அமையும் என்பதை இவர்கள் வலியுறுத்தினர்.
வழங்கல் தொடர் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான நிலைமையை ஆய்வு செய்து பாராட்டிய அமைச்சர்கள், மேலும் கூடுதலான போட்டித் தன்மையுடனும், நெகிழ் திறனுடனும் வழங்கல் தொடர்களில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது பற்றியும் எடுத்துரைத்தனர். வழங்கல் தொடர்களில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதற்கும் எதிர்கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். வழங்கல் தொடர் ஒப்பந்தத்தின் 3 அமைப்புகளான வழங்கல் தொடர் கவுன்சில், நெருக்கடி தீர்வு வலைப்பின்னல், தொழிலாளர் உரிமை ஆலோசனை வாரியம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட முன்னேற்றம் குறித்து வரும் மாதங்களில் மேற்கொள்ள வேண்டிய உறுதியான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மின்கலன்கள், ரசாயனங்கள் மீதான கவனத்துடன் குறைகடத்திகள், முக்கியமான கனிமங்கள் ஆகியவை பற்றி வாஷிங்டனில் கடந்த வாரம் நேரடி பங்கேற்புடன் நடைபெற்ற முதலாவது வழங்கல் தொடர் கவுன்சில் கூட்டத்தில் செயல்திட்ட அணிகள் உருவாக்கம் பற்றி குறிப்பிட்ட திரு கோயல், இவை தற்போது மிகவும் பொருத்தமானவை என்றார்.
வெளிநாட்டின் லஞ்சம் தொடர்பான சட்டங்களை அமலாக்குவது குறித்து இந்தியா – பசிஃபிக் பொருளாதார கட்டமைப்பு, 2024 அக்டோபரில் பயிலரங்கு ஒன்றை நடத்தவிருப்பதாகவும், இதனை அமெரிக்காவின் வெளியுறவுத் துறை, மலேசியாவில் ஊழல் தடுப்பு ஆணையம், போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் குறித்த ஐநா அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து இதனை நடத்தும் என்றும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா – பசிஃபிக் பொருளாதார கட்டமைப்பு என்பது 2022, மே 23 அன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, இந்தியா, வியட்நாம், ஆஸ்திரேலியா, புருனே, ஃபிஜி, இந்தோனேஷியா, ஜப்பான், கொரிய குடியரசு, மலேசியா, நியூசிலாந்து. பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய 14 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2058232
***
SMB/RS/KR/DL
(Release ID: 2058297)
Visitor Counter : 31