அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இன்ஸ்பயர்-மானக்-ன் கீழ் 11-வது தேசிய அளவிலான கண்காட்சியும், போட்டியும் வெற்றிகரமாக நிறைவடைந்தன
Posted On:
20 SEP 2024 12:07PM by PIB Chennai
அறிவியல், தொழில்நுட்பத் துறை (டி.எஸ்.டி) செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர் தலைமையில் புதுதில்லியில் இன்ஸ்பயர்-மானக் நிறைவு விழா நடைபெற்றது. போட்டியின் வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா, 11-வது தேசிய அளவிலான கண்காட்சி ஆகியவற்றின் நிறைவு நிகழ்ச்சியில் திரு அபய் கரண்டிகர் பேசுகையில், இளம் மனங்களில் ஆர்வத்தை வளர்ப்பதன் மூலம் நீண்டகால சமூக, தேசிய, உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.
வெற்றிபெற்ற மாணவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர தேவையான வளங்கள், ஆதரவு, வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்வது கூட்டுப் பொறுப்பாகும் என்று அவர் கூறினார். இளம் கண்டுபிடிப்பாளர்கள் தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றுவதாகவும், இதுபோன்ற தொடர்ச்சியான முயற்சிகளால், 2047 ஆம் ஆண்டில் உலகளவில் முதல் ஐந்து புதுமை கண்டுபிடிப்பு நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இன்ஸ்பயர்-மானக், 2024 செப்டம்பர் 17 அன்று தொடங்கியது. அதில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 350 மாணவர்களின் புதுமையான யோசனைகள் காட்சிப்படுத்தப்பட்டன. 2024 செப்டம்பர் 19 அன்று விக்யான் பவனில் நடைபெற்ற மதிப்புமிக்க விழாவில் சிறந்த 31 இளம் கண்டுபிடிப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இன்ஸ்பயர் மானக் என்பது அறிவியல், தொழில்நுட்பத் துறையின் (DST) கீழ் செயல்படுத்தப்படும் ஒரு முதன்மைத் திட்டமாகும். தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை இதனை செயல்படுத்தும் அமைப்பாக உள்ளது.
இந்த திட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மொத்தம் 7.96 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இதில், 52% பெண்கள் விண்ணப்பித்தனர்.
2024 செப்டம்பர் 17 முதல் 18 வரை நடைபெற்ற கண்காட்சியில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்றனர். இது இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு தங்கள் யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும் ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்கியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2056903
***
PLM/RS/KR
(Release ID: 2056972)
Visitor Counter : 42