குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
நாட்டில் நம்பிக்கை நிறைந்த சூழலை பிரதமர் திரு நரேந்திர மோடி உருவாக்கியுள்ளார்: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
Posted On:
18 SEP 2024 3:44PM by PIB Chennai
நாட்டில் நம்பிக்கையும் வாய்ப்புகளும் நிறைந்த சூழ்நிலையை பிரதமர் திரு நரேந்திர மோடி உருவாக்கியுள்ளார் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறயுள்ளார்.
காந்திநகரில் இன்று (18.09.2024) நடைபெற்ற 4வது குளோபல் ரீ-இன்வெஸ்ட்- 2024 நிகழ்வின் நிறைவு விழாவில் உரையாற்றிய திரு ஜக்தீப் தன்கர், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2014-ல் நாட்டின் விரக்தியடைந்த மனநிலையை மாற்றியதாக கூறினார். 2019-ம் ஆண்டில் நம்பிக்கையையும் வாய்ப்புகளையும் உருவாக்கியதாகவும் 2024-ம் ஆண்டில் சாதனைகள் வானளாவியதாக இருக்கும் என்றும் கூறினார்.
மிக நீண்ட காலத்திற்குப் பிறகு, இந்தியாவிலிருந்து ஒரு தலைவர் உலக விவாதத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார் என்பது பெருமைக்குரிய விஷயம் என்று கூறிய திரு ஜக்தீப் தன்கர் நாம் அதிர்ஷ்டசாலிகள் என்று தெரிவித்தார்.
உலகில் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கான மையமாக பாரதம் உள்ளதைக் குறிப்பிட்ட திரு தன்கர், கடந்த 10 ஆண்டுகளில் இது ஏற்பட்டுள்ளது என்றார்.
இந்தியாவின் வளர்ச்சியில் குஜராத்தின் பங்களிப்பு குறித்து அவர் குறிப்பிட்டார். குஜராத் உலகிற்கும், குறிப்பாக நாட்டிற்கும் வழி காட்டியுள்ளது என்றார். இந்த மண்ணிலிருந்து மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், திரு நரேந்திர மோடி ஆகியோர் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜி-20 இயக்கத்தின் முக்கிய சாதனைகளை சுட்டிக் காட்டிய திரு தன்கர், "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற குறிக்கோள், இந்தியாவின் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ள வசுதைவ குடும்பகம் என்ற தத்துவத்தை பிரதிபலிக்கிறது என்றார்.
பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு ஊடகங்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். எரிசக்தியை உகந்த முறையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வலியுறுத்தினார்.
குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்விரத், முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய அமைச்சர்கள் திரு பிரல்ஹாத் ஜோஷி, திரு பூபேந்தர் யாதவ், பஞ்சாப் ஆளுநர் திரு குலாப் சந்த் கட்டாரியா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***
PLM/AG/DL
(Release ID: 2056263)
Visitor Counter : 40