தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் பிராந்திய அளவிலான 3-வது கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்
Posted On:
15 SEP 2024 8:12PM by PIB Chennai
தொழிலாளர் சீர்திருத்தங்கள், வேலைவாய்ப்பு குறித்து நாட்டின் மேற்கு பகுதியில் மாநிலங்களான மகாராஷ்டிரா, கோவா, யூனியன் பிரதேசங்களான தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையூ, லட்சத்தீவு ஆகியவற்றின் பிராந்திய அளவிலான 3-வது கூட்டம் குஜராத்தின் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்.
நாட்டில் உள்ள அமைப்பு சார்ந்த, அமைப்பு சாராத தொழிலாளர்கள் அனைவருக்கும் எளிதாக சமூக பாதுகாப்பு கிடைப்பதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக இந்தக் கூட்டத்தில் பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தின் சேவைகளையும், பயன்களையும் விரிவுபடுத்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் தமது அமைச்சகம் பணியாற்றி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். பயனாளிகளுக்கு தரமான சேவை கிடைக்க செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பத்தை பெருமளவு பயன்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகளிடையே மகத்தான ஒத்துழைப்பு காலத்தின் தேவை என அவர் குறிப்பிட்டார். உலகத் தரத்துடனான தரவு நிர்வாகத்திற்கு அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தின் தன்வந்த்ரி போர்ட்டல் வலுப்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் திருமதி சுமிதா தாவ்ரா, 2030-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 65 சதவீதம் பேர் பணிசெய்யும் திறன் உள்ளவர்களாக இருப்பார்கள் என்றும், இவர்களுக்கு தரமான வேலைவாய்ப்பும், திறன் மேம்பாடும் வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் தெரிவித்தார். தொழில்துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கவும், இளைஞர்களுக்கு திறன், தரமான வேலை, சமூக பாதுகாப்பு வழங்கவும், 2024-25-ம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டில் ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தொடரில் அடுத்த கூட்டம் நாட்டின் கிழக்குப்பகுதி மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பங்கேற்புடன் புவனேஸ்வரில் நடைபெற உள்ளது.
***
(Release ID: 2055255)
SMB/RS/KR
(Release ID: 2055296)
Visitor Counter : 61