வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வர்த்தக மற்றும் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்தில் வர்த்தகத்துறை செயலாளர் மெய்நிகர் முறையில் பங்கேற்பு
Posted On:
13 SEP 2024 4:18PM by PIB Chennai
வெளிநாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) அமைச்சர்கள் நிலையிலான 23-வது கூட்டத்தில் வர்த்தகத்துறை செயலாளர் திரு சுனில் பர்த்வால் நேற்று மெய்நிகர் முறையில் கலந்து கொண்டார். 2017-ம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினராக இந்தியா இணைந்ததிலிருந்து, அமைப்பின் வளர்ச்சித் திட்டத்தில் இந்தியா தீவிரமாகப் பங்களித்து வருகிறது என்று வர்த்தகத்துறை செயலாளர் தனது உரையில் குறிப்பிட்டார்.
உலகப் பொருளாதார ஒழுங்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவர், இதன் அரசுத் தலைவர்களுக்கு தலைமை தாங்கியதற்காக பாகிஸ்தானுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்த அமைப்பில் இணைந்த பெலாரஸ் குடியரசை (புதிய உறுப்பினர்) வரவேற்றார்.
வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வலுவான இணைப்பின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இணைப்புத் திட்டங்களை வலுப்படுத்த இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ளும் அதே வேளையில், நமது கூட்டுறவு முயற்சிகளில் நம்பிக்கையையும் வெளிப்படைத்தன்மையையும் உருவாக்குவது அவசியம் என்று கூறினார்.
21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தின் நூற்றாண்டு என்றும், செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய உத்தியை வகுத்து செயற்கை நுண்ணறிவு இயக்கத்தைத் தொடங்கிய சில நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார். நமது சமூகத்தின் நன்மைக்காக பொறுப்பான வளர்ச்சியை அடைவதில் 'அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு' என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை, வெளிப்படையானதாக, நியாயமானதாக, பாதுகாப்பானதாக, அணுகக்கூடியதாக பொறுப்பானதாக மாற்ற நெருக்கமாக பணியாற்றுவதன் மூலம் உணர முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக பங்கேற்கவும், வெற்றிகரமான முடிவுகளுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் அளிக்கவும் இந்தியாவின் உறுதிப்பாட்டை தனது உரையின் நிறைவில் வர்த்தகத்துறை செயலாளர் மீண்டும் வலியுறுத்தினார்.
வெளிநாட்டுப் பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அமைச்சர்களின் 23 வது கூட்டம் பாகிஸ்தான் தலைமையில் நடைபெற்றது.
***
SMB/AG/DL
(Release ID: 2054637)
Visitor Counter : 36