தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

பாராலிம்பிக் வில்வித்தை சாம்பியன் ஷீத்தல் தேவி மற்றும் ராகேஷ் குமார் வாக்காளர் விழிப்புணர்வு அணியில் சேர்ந்தனர்

Posted On: 11 SEP 2024 8:01PM by PIB Chennai

பாராலிம்பிக் வில்வித்தை சாம்பியன்களான ஷீத்தல் தேவி மற்றும் திரு ராகேஷ் குமார் ஆகியோர் நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களை ஈர்க்க இந்திய தேர்தல் ஆணையத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாளமாக உள்ளனர். பாரிஸ் கோடைக்கால பாராலிம்பிக் 2024-ல் வில்வித்தையில் வெண்கலப் பதக்கம் வென்ற சிறந்த சாதனையை அங்கீகரிப்பதற்காக அர்ஜுனா விருது பெற்றவரும், தேர்தல் ஆணையத்தின் தேசிய மாற்றுத்திறனாளி விளம்பர தூதருமான ஷீத்தல் தேவி, அவரது கலப்பு இரட்டையர் அணி இணையர் ராகேஷ் குமார் ஆகியோரை தலைமை தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் பாராட்டினார் இந்த நிகழ்ச்சியில், புகழ்பெற்ற பாராலிம்பிக் வீரர் ராகேஷ் குமார், மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய விளம்பர தூதராக அறிவிக்கப்பட்டார்.

ஷீத்தல் தேவி, அவரது தாயார் திருமதி சக்தி தேவி, பயிற்சியாளர்கள் செல்வி அபிலா3ஷா சவுத்ரி மற்றும் திரு குல்தீப் குமார் ஆகியோரை தலைமை தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு ஞானேஷ் குமார் மற்றும் டாக்டர் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் இன்று தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அன்புடன் வரவேற்றனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் தமது உரையில், தங்கள் விளையாட்டைப் போலவே, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த வில்வித்தை வீரர்களும் தேர்தல் நடைமுறையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் வாக்காளர்களின் பங்களிப்பை அதிகரிக்க அணி திரள்வார்கள் என்று கூறினார். சாம்பியன்களின் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டைப் பாராட்டிய தலைமை தேர்தல் ஆணையர், சமத்துவத்தின் கொள்கைகள் நிலைநிறுத்தப்படும்போது, ஊனம் ஒரு தடையாக பார்க்கப்படுவதில்லை, மாறாக சவால்களை சமாளிக்க கூடுதல் பலங்களை வளர்ப்பதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது என்று கூறினார். இவ்வளவு இளம் வயதிலேயே ஷீத்தல் தேவி இளைஞர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உத்வேகம் அளிப்பதாக திகழ்கிறார் என்றும், விளையாட்டுகளில் ஈடுபடவும், ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்கவும் அவர்களை ஊக்குவித்து வருகிறார் என்றும் அவர் கூறினார்.

பாராலிம்பிக் வீரர்களை வாழ்த்திய தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார், அவர்களின் பயணம் மாற்றுத்திறனாளிகளுக்கு உத்வேகம் அளிப்பதாகவும், தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக இருப்பது வாக்காளர் பங்கேற்பை ஊக்குவிக்க உதவும் என்றும் கூறினார்.

தேர்தல் ஆணையர் டாக்டர் எஸ்.எஸ்.சந்து சாம்பியன்களை அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்காக பாராட்டினார், பலருக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு முன்மாதிரியாக தொடர்ந்து இருக்க அவர்களை ஊக்குவித்தார்.

----

PKV/KPG/KV


(Release ID: 2054150) Visitor Counter : 32


Read this release in: English , Urdu , Hindi , Bengali