உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு, புதுதில்லியில் சிவில் விமானப் போக்குவரத்து குறித்த ஆசிய-பசிபிக் அமைச்சர்கள் அளவிலான 2-வது மாநாட்டை தொடங்கி வைத்தார்
Posted On:
11 SEP 2024 9:41PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் சிவில் விமானப் போக்குவரத்து குறித்த ஆசிய-பசிபிக் அமைச்சர்கள் அளவிலான 2-வது மாநாட்டை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு முரளிதர் மொஹோல், சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவர் திரு சால்வடோர் சியாச்சிடானோ, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் திரு வும்லுன்மாங் வுல்னாம் மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 29 நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மாநாட்டில் உரையாற்றிய திரு ராம்மோகன் நாயுடு, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சிவில் விமானப் போக்குவரத்தின் வளர்ச்சிக் கதையை எடுத்துரைத்தார். இந்த பிராந்தியத்தில் வர்த்தக விமானப் போக்குவரத்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கியது என்றும், இன்று, 2035-ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 3.5 பில்லியனுக்கும் அதிகமான பயணிகளுடன் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து சந்தையாக மாற இப்பகுதி தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பில் உத்திசார் முதலீடுகள் மற்றும் பிராந்திய பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கு அவர் அழைப்பு விடுத்தார், இது துறை முழுவதும் நிலையான மற்றும் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்கிறது.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் விமானப் போக்குவரத்தில் இந்தியாவின் விரைவான முன்னேற்றங்களை திரு ராம்மோகன் நாயுடு கோடிட்டுக் காட்டினார். "2014-ஆம் ஆண்டில் 74-இலிருந்து, 2024-ஆம் ஆண்டில் 157 ஆக இந்தியாவின் விமான நிலைய உள்கட்டமைப்பு விரிவடைந்துள்ளது. 2047 க்குள் இந்த எண்ணிக்கையை 350-400 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது" என்று திரு நாயுடு கூறினார். கடந்த பத்தாண்டுகளில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும், இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளன என்றும் அவர் கூறினார். புதிய சர்வதேச விமான நிலையங்களை உருவாக்குதல் மற்றும் தில்லி, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற முக்கிய விமான நிலையங்களின் விரிவாக்கம் ஆகியவற்றுடன் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பில் அரசு கவனம் செலுத்துவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2053964
***************
BR/KV
(Release ID: 2054100)
Visitor Counter : 48