பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை துணைத் தளபதிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க விமானப் பயணம் உள்நாட்டு பாதுகாப்பு திறன்களில் மைல்கல்லைக் குறிக்கிறது
Posted On:
09 SEP 2024 7:30PM by PIB Chennai
இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு ஒரு முக்கிய நிகழ்வாக, இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் துணைத் தளபதிகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானம் (எல்.சி.ஏ) தேஜஸில் பறந்து இன்று வரலாறு படைத்தனர். தேஜஸ் இரட்டை இருக்கை விமானத்தில் ஏர் மார்ஷல் ஏ.பி.சிங், ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி மற்றும் கடற்படை துணைத் தளபதி வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் ஆகியோர் பயணம் செய்தனர். நவீன சவால்களை எதிர்கொள்ள தரை, கடல் மற்றும் விமானப்படைகள் ஒன்றிணைந்து செயல்படுவதால், இந்தப் பயிற்சி, அவர்களின் கூட்டு பங்கேற்பு அதிகரித்து வருவதை நிரூபிக்கிறது. முப்படைகளின் துணைத் தளபதிகள் ஒரே சமயத்தில் பயணம் செய்ததைக் குறிக்கும் இந்த நிகழ்வு, இந்தியாவின் ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திறன்கள், தற்சார்புக்கான உறுதிப்பாடு ஆகியவற்றிற்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும், மேலும் இது அவர்களின் தலைமைத்துவத்தை மட்டுமல்ல, இந்தியாவின் ஆயுதப்படைகளின் தடையற்ற ஒருங்கிணைப்பையும் காட்டுகிறது.
ஜோத்பூரின் வான் பகுதியில் இந்த நிகழ்வு நடந்தது, இதில் இந்திய விமானப்படை தரங் சக்தி 2024 என்ற பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது, இது பங்கேற்கும் நட்பு வெளிநாடுகளிடையே (எஃப்.எஃப்.சி) இயங்கும் தன்மை மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் முதல் பன்னாட்டு பயிற்சியாகும். பல்வேறு பங்கேற்பாளர்களுடன், ஐ.ஏ.எஃப் தலைமையிலான பயிற்சி எண்ணற்ற திறன்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பணியில் தேஜஸைச் சேர்ப்பது, இந்தியாவின் பாதுகாப்பு உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதில் உள்நாட்டு தளங்கள் வகிக்கும் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி வலிமையின் அடையாளமான தேஜஸின் பயணம், நாட்டின் 'மேக் இன் இந்தியா' முயற்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தை பிரதிபலிக்கிறது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்) உருவாக்கி தயாரித்த ஏரோநாட்டிகல் டிசைன் ஏஜென்சி (ஏ.டி.ஏ) வடிவமைத்த தேஜஸ் ஒரு அதிநவீன பல்நோக்கு போர் விமானமாகும், இது இந்தியாவின் ஆயுதப்படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைக்கிறது.
இந்த வாய்ப்பை மூன்று துணைத் தளபதிகள், இந்தியாவிலிருந்தும், எஃப்.எஃப்.சிகளிலிருந்தும் பங்கேற்கும் படைகளுடன் கலந்துரையாடவும் பயன்படுத்திக் கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053222
***
BR/RR
(Release ID: 2053350)
Visitor Counter : 47