உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

சிவில் விமானப் போக்குவரத்து: பிராந்திய விமானப் போக்குவரத்து வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை நோக்கமாகக் கொண்ட 2-வது ஆசிய-பசிபிக் அமைச்சர்கள் அளவிலான மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது

Posted On: 09 SEP 2024 8:36PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள ராஜீவ் காந்தி பவனில் நடைபெற்ற சிவில் விமானப் போக்குவரத்து குறித்த 2-வது ஆசிய பசிபிக் அமைச்சர்கள் அளவிலான மாநாடு, 2024 பற்றி மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு செய்தியாளர்களிடம் பேசினார். 

"இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தை அனுபவித்து வரும் ஒரு முக்கியமான நேரத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது" என்று அப்போது அவர் கூறினார். உலகளவில் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான சந்தையாக, பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் ஓவர்ஹால் (எம்.ஆர்.ஓ) சேவைகள், சரக்கு செயல்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த பிராந்திய விமானப் போக்குவரத்துக்கான முக்கிய மையமாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என்று அவர் மேலும்  தெரிவித்தார். புதிய  பசுமை விமான நிலையங்களின் தற்போதைய வளர்ச்சி மற்றும் பிராந்திய விமான இணைப்பை ஊக்குவிக்கும் உடான் போன்ற முற்போக்கான கொள்கைகள் இந்தியாவை நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கின்றன என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

சிவில் விமானப் போக்குவரத்து குறித்த 2 வது ஆசிய பசிபிக் அமைச்சர்கள் மாநாடு 2024 செப்டம்பர் 11 முதல் 12 வரை புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு மற்றும் இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இணைந்து நடத்துகின்றன. ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் அமைச்சர்கள் அளவிலான முதலாவது மாநாடு 2018-இல் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்றது. முதல் மாநாட்டின் போது, 2020-இல் இரண்டாவது மாநாட்டை நடத்த இந்தியா தானாக முன்வந்தது, ஆனால் கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக, மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.

"ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் விமானப் பயணத்தை மாற்ற உதவும் முயற்சிகளில் முன்னணியில் இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் வளர்ச்சியைத் தூண்டுவது மட்டுமல்லாமல், பிராந்தியத்தின் விமானப் போக்குவரத்து சூழலியலில் முக்கிய பங்கு வகிப்பதும் எங்கள் நோக்கம்" என்று திரு நாயுடு கூறினார் .

உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்து சந்தைகளின் தாயகமான ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் விமானப் போக்குவரத்துத் தொழிலின் உடனடி சவால்கள் மற்றும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து இந்த அமைச்சர்கள் மாநாட்டில்  ஆலோசிக்கப்படும்  என்று அமைச்சர் கூறினார். 2035-ஆம் ஆண்டில், இந்த பிராந்தியம் உலகளாவிய விமானப் போக்குவரத்தில் 40% க்கும் அதிக  பங்களிப்பை வழங்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053262

***

BR/RR



(Release ID: 2053339) Visitor Counter : 10


Read this release in: English , Urdu , Hindi