ஜவுளித்துறை அமைச்சகம்
2030-ம் ஆண்டுக்குள் தொழில்நுட்ப ஜவுளி ஏற்றுமதி இலக்கான 10 பில்லியன் டாலரைக் கடக்க முடியும் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு. கிரிராஜ் சிங் நம்பிக்கை
Posted On:
06 SEP 2024 5:27PM by PIB Chennai
இந்தியாவின் தொழில்நுட்ப ஜவுளித் தொழில் 2030-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட 10 பில்லியன் டாலர் இலக்கை தாண்டும் என்று நம்பிக்கை உள்ளது. புதுதில்லியில் இன்று நடைபெற்ற வளர்ச்சி அடைந்த இந்தியா – நீடித்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தொழில்நுட்ப ஜவுளிகள் என்ற சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு. கிரிராஜ் சிங் இதனைத் தெரிவித்தார்.
உலக அளவிலும், உள்நாட்டு அளவிலும் வாழ்க்கையின் அனைத்து இடங்களிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட இழைகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகளின் நுகர்வு மற்றும் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டினார். தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் தொகுப்பையும் அவர் தொடங்கி வைத்ததுடன், என்டிடிஎம்-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 11 புதிய தொழில்களுக்கு உறுதிப்படுத்தல் சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்தியாவின் தொழில்நுட்ப ஜவுளித் தொழிலின் வளர்ச்சியில் அரசு முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும், தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம், எம்.எம்.எஃப் ஃபேப்ரிக், ஆடை மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகளுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் கூறினார்.
என்டிடிஎம் இயக்கத்தின் கீழ் எடுக்கப்பட்ட முக்கிய முன்முயற்சிகளை எடுத்துரைத்த மத்திய அமைச்சர், கார்பன் இழைகளை மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப ஜவுளித்துறையின் பல்வேறு பிரிவுகளின் கீழ் புத்தொழில்களுக்கு ஆதரவு உட்பட 156 ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார். இந்த இலக்கை அடைவதில் மெடிடெக், குறிப்பாக சுகாதார தயாரிப்புகளின் திறனை அவர் வலியுறுத்தினார்.
விண்வெளி, ஆட்டோமொபைல் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெரும் பயன்பாடுகளைக் கொண்ட உயர் செயல்திறன் இழைகளை உருவாக்குவதில் உள்ளூர் தொழில் துறையினர், அரசு மற்றும் பங்குதாரர்களின் திறனில் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தனது உரையை நிறைவு செய்த மத்திய அமைச்சர், தொழில்நுட்ப ஜவுளித் துறையின் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், உலகத் தலைவராகவும் மாறுவதற்கு அரசின் முழு ஆதரவையும் உறுதிபட தெரிவித்தார்.
தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் தொகுப்பையும் தொடங்கி வைத்த திரு சிங், என்டிடிஎம்-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 11 புதிய தொழில்களுக்கு உறுதிப்படுத்தல் சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இந்திய தொழில்நுட்ப ஜவுளி சங்கம் (ITTA) ஆகியவற்றுடன் இணைந்து மத்திய ஜவுளி அமைச்சகம் இந்த சர்வதேச மாநாட்டை இந்தியாவின் புது தில்லியில் உள்ள அசோக் ஹோட்டலில் அதன் முதன்மை திட்டமான தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் ஏற்பாடு செய்திருந்தது.
தொழில்நுட்ப ஜவுளி உட்பட அனைத்து துறைகளிலும் தற்சார்பு நாடாக மாறுவதை நோக்கி நாடு முன்னேறி வருவதாக மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா தெரிவித்தார். தொழில்நுட்ப ஜவுளித் தொழிலில், அந்நிய நேரடி முதலீடு உள்ளிட்ட முதலீடுகளை ஊக்குவிக்க, பல்வேறு மாநில அரசுகள் முன்முயற்சி எடுத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மற்ற மாநிலங்களும் இதைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வளர்ச்சியடைந்த இந்தியா திட்டத்தில், தொழில்நுட்ப ஜவுளிகளின் பங்கை ஜவுளித்துறை செயலாளர் திருமதி ரச்னா ஷா சுட்டிக்காட்டினார். தொழில்நுட்ப ஜவுளித்துறையில் பெரிய சந்தை வாய்ப்பை எடுத்துரைத்த செயலாளர், தொழில்நுட்ப ஜவுளிகளின் உலகளாவிய வர்த்தகம் சுமார் 300 பில்லியன் டாலர் என்றும், இந்தியாவின் உள்நாட்டு சந்தை அளவு 2.6 பில்லியன் டாலர் ஏற்றுமதியுடன், 25 பில்லியன் டாலராக உள்ளது என்றும் கூறினார். தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் பற்றிப் பேசிய அவர், தரநிலைகள், தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் மற்றும் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதில், இந்த இயக்கத்தின் கீழ் அதிக கவனம் செலுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.
விண்வெளித் துறையில் கலவைகள் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட இழைகளின் முக்கியத்துவத்தையும், இந்தியாவில் இந்த தயாரிப்புகளின் வணிக உற்பத்தி வசதிகள் இல்லாததையும் டாக்டர் எஸ்.சோமநாத் எடுத்துரைத்தார், இது அதிக இறக்குமதி நம்பகத்தன்மைக்கு வழிவகுக்கிறது. உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, பெரிய உலகச் சந்தையையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிக்கலான இயந்திரங்களை உருவாக்குவது உட்பட இந்தத் துறையில் பெரிய அளவிலான முதலீடுகளை மேற்கொள்ளுமாறு தொழில்துறையினரையும் பங்குதாரர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.
என்டிடிஎம்-மின் இணைச் செயலாளரும் திட்ட ஒருங்கிணைப்பாளருமான திரு ராஜீவ் சக்சேனா, என்டிடிஎம்-மின் ஆறு வழிகாட்டுதல்களின் கீழ் வழங்கப்படும் கொள்கை முன்முயற்சிகள் மற்றும் ஆதரவு பற்றிய கண்ணோட்டத்தை வழங்கினார். கியூசிஓ உட்பட 57 தொழில்நுட்ப ஜவுளிப் பொருட்களுக்கான தரக் கட்டுப்பாட்டு ஆணை வெளியிடப்பட்டது, தொழில்நுட்ப ஜவுளி வரம்பிற்குள் 37 புதிய எச்.எஸ்.என் குறியீடுகளை உள்ளடக்கியது உள்ளிட்ட இயக்கத்தில், இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார்.
மாநாட்டின் தொடக்க அமர்வில், இஸ்ரோ தலைவரும் விண்வெளித் துறை செயலாளருமான டாக்டர் எஸ். சோமநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டின் முதல் நாளில், வேலைவாய்ப்பு, புத்தாக்கம், சமூக தாக்கம் மற்றும் தொழில்நுட்ப ஜவுளித் துறையின் எதிர்கால திசை குறித்த 4 குழு விவாதங்கள் இளடம்பெற்றன. குழு விவாதங்களில் அரசு பிரதிநிதிகள், தொழில்துறை தலைவர்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் பங்கேற்றனர்.
---
MM/KPG/DL
(Release ID: 2052644)
Visitor Counter : 135