மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024-ம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருதை தேர்ந்தெடுக்கப்பட்ட 82 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் 5 செப்டம்பர் 2024 அன்று வழங்குகிறார்

Posted On: 04 SEP 2024 7:33PM by PIB Chennai

2024-ம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர்கள் விருதை தேர்ந்தெடுக்கப்பட்ட 82 பேருக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2024 செப்டம்பர் 5 ஆம் தேதி புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் வழங்குகிறார். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி, ஆண்டு தோறும் தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. தேசிய ஆசிரியர்கள் விருதின் நோக்கம், நாட்டில் ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பைக் கொண்டாடுவதும், அவர்களின் அர்ப்பணிப்பு மூலம் கல்வியின் தரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், அவர்களிடம் பயிலும் மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்திய ஆசிரியர்களை கௌரவிப்பதும் ஆகும். ஒவ்வொரு விருதும் தகுதிச் சான்றிதழ், ரூ.50,000 ரொக்கப் பரிசு மற்றும் வெள்ளிப் பதக்கம் கொண்டதாகும். விருது பெறுபவர்கள் பிரதமருடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் பெறுவார்கள்.

கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை இந்த ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருதுக்கு 50 ஆசிரியர்களைத் தேர்வு செய்துள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான தேர்வு செயல்முறை என்ற கடுமையான, வெளிப்படையான மற்றும் ஆன்லைன் மூலம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 50 ஆசிரியர்கள் 28 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 6 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட 50 ஆசிரியர்களில் 34 பேர் ஆண்கள், 16 பெண்கள் ஆசிரியர்கள், 2 மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஒரு ஆசிரியர் சிறப்புதிறன் பள்ளியில் பணிபுரிபவர் ஆவர். மேலும், உயர்கல்வித் துறையைச் சேர்ந்த 16 ஆசிரியர்களுக்கும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தைச் சேர்ந்த 16 ஆசிரியர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது.

மாணவர்கள், நிறுவனம் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு உந்துதல், ஆற்றல் மற்றும் திறமையான ஆசிரியர்கள் முக்கியம் என்பதை தேசிய கல்விக் கொள்கை 2020 அங்கீகரிக்கிறது. கல்வி சுற்றுச்சூழல் அமைப்பில் சிறந்த கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு வெகுமதிகள் மற்றும் அங்கீகாரம் போன்ற ஊக்கத்தொகைகளையும் இது எதிர்பார்க்கிறது. எனவே, 2023 ஆம் ஆண்டில், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாலிடெக்னிக்குகளுக்கு இரண்டு வகை விருதுகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தப் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட 16 ஆசிரியர்கள் பாலிடெக்னிக், மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தமிழ்நாட்டில் இருந்து பள்ளிகள் பிரிவில் ராஜாகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆர் கோபிநாத், மதுரை டிவிஎஸ் உயர்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் முரளீதரன் ரம்யா சேதுராமன், பாலிடெக்னிக் பிரிவில் சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் உதவிப் பேராசிரியர் டாக்டர் ஏ காந்திமதி, சென்னை சவிதா பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவக்கல்லூரி நுண்ணுயிரியல் துறைத்தலைவர் பேராசிரியர் ஏ எஸ் ஸ்மைலினி கிரிஜா ஆகியோர் குடியரசுத் தலைவரிடம் விருது பெற உள்ளனர்.

***

MM/AG/DL


(Release ID: 2051932) Visitor Counter : 122