பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விசாகப்பட்டினத்தில் பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் இரண்டாவது அரிஹந்த் ரக நீர்மூழ்கி கப்பலான 'ஐஎன்எஸ் அரிகாத்' இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது

Posted On: 29 AUG 2024 6:35PM by PIB Chennai

​இரண்டாவது அரிஹந்த் ரக நீர்மூழ்கிக் கப்பலான 'ஐ.என்.எஸ் அரிகாத்' ஆகஸ்ட் 29, 2024 அன்று விசாகப்பட்டினத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் தனது உரையில், 'அரிகாத்', இந்தியாவின் அணு ஆரத்தை  மேலும் வலுப்படுத்தும், அணுசக்தி தடுப்பை மேம்படுத்தும், பிராந்தியத்தில் உத்திசார் சமநிலை மற்றும் அமைதியை நிறுவ உதவும் மற்றும் நாட்டின் பாதுகாப்பில் தீர்க்கமான பங்கை வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இது தேசத்திற்கான சாதனை என்றும், பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை அடைவதில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்கு இது ஒரு சான்று என்றும் அவர் விவரித்தார்.

இந்தத் திறனை அடைவதில் இந்திய கடற்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தொழில்துறையினரின் கடின உழைப்பு மற்றும் ஒத்துழைப்பை  திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார். இந்த தற்சார்பே சுய அதிகாரத்தின் அடித்தளம் என்று அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டின் தொழில் துறை, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் பெரும் ஊக்கத்தைப் பெற்றிருப்பதையும், அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதையும் அவர் பாராட்டினார்.

முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசியல் உறுதிபாட்டை நினைவு கூர்ந்த பாதுகாப்புத் துறை அமைச்சர், "இன்று, இந்தியா வளர்ந்த நாடாக மாற முன்னேறி வருகிறது. இன்றைய புவிசார் அரசியல் சூழ்நிலையில், பாதுகாப்பு உட்பட ஒவ்வொரு துறையிலும் நாம் வேகமாக வளர்ச்சி அடைவது அவசியம். பொருளாதார வளத்துடன், வலுவான ராணுவமும் நமக்குத் தேவை. இந்திய மண்ணில் தயாரிக்கப்பட்ட உயர்தர ஆயுதங்கள் மற்றும் தளங்களை நமது வீரர்கள் வைத்திருப்பதை உறுதி செய்ய எங்கள் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது”, என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2049870

***********************

BR/KV



(Release ID: 2049987) Visitor Counter : 48