ஊரக வளர்ச்சி அமைச்சகம்
பிரதமரின் கனவு வறுமை இல்லாத கிராமம்: திரு சிவராஜ் சிங் சௌகான்
Posted On:
13 AUG 2024 6:26PM by PIB Chennai
வறுமை இல்லாத கிராமம் என்பது பிரதமரின் கனவு என்று மத்திய ஊரக மேம்பாடு, வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் உள்ள ராஜேந்திர நகரில் இன்று நடைபெற்ற தேசிய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்துராஜ் நிறுவனத்தின் 66-வது பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய அவர், ஊரக மேம்பாடு என்றால் நல்ல பள்ளிகள், நல்ல ஊராட்சி அலுவலகம், நல்ல சமூகக் கூடம், நல்ல சுகாதார வசதிகள் என்பது பொருளாகும் என்றார்.
கிராமங்களில் எவரும் ஏழையாக இருக்கக் கூடாது என்றும், அனைவரும் வேலைவாய்ப்பு பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட திரு சௌகான், மகாத்மா காந்தியின் கனவு சுயராஜ்ஜியம் என்பதாகும் என்றார். கிராமங்கள் நல்ல சாலை போக்குவரத்து வசதியை பெறுவது அவசியம் என்றும், இதனால்தான் 2000-வது ஆண்டில் பிரதமராக இருந்து மறைந்த திரு அடல் பிகாரி வாஜ்பாய், பிரதமரின் கிராமசாலை திட்டத்தைத் தொடங்கினார் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது இந்தத் திட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடியால் மேலும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.
நாடு முழுவதும் 10 கோடி சகோதரிகள் வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்திருக்கிறார்கள் என்றும், இது அவர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பது மட்டுமின்றி இந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். தற்போது ஒரு கோடி லட்சாதிபதி சகோதரிகள் என்ற எண்ணிக்கையை 3 கோடி லட்சாதிபதி சகோதரிகள் என மாற்றுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார் என்று திரு சௌகான் கூறினார்.
பின்னர், இந்த நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஊரக தொழில்நுட்ப பூங்காவை பார்வையிட்ட அமைச்சர் பிரதமரின் ஊரக வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 படுக்கை அறைகள் கொண்ட மாதிரி வீட்டினை திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர்கள் திரு கமலேஷ் பாஸ்வான், டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி, இந்தத் துறையின் செயலாளர் சைலேஷ்குமார் சிங், தேசிய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்துராஜ் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஜி நரேந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2044937
***
SMB/AG/DL
(Release ID: 2044980)
Visitor Counter : 46