சுரங்கங்கள் அமைச்சகம்

நாட்டில் கனிம ஆய்வுகளை வலுப்படுத்துவது தொடர்பான கூட்டம் - மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தலைமை வகித்தார்

Posted On: 12 AUG 2024 8:13PM by PIB Chennai

மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டியின் வழிகாட்டுதலில் மத்திய சுரங்க அமைச்சகம் இந்தியாவின் கனிம ஆய்வுத் துறையை முன்னேற்றுவதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளையின் (NMET- என்எம்இடி) 6-வது ஆட்சிக் குழு கூட்டத்தில், 2023-24-ம் நிதியாண்டில் இந்த அமைப்பின் செயல்திறன் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தின் போது, 2023-24-ம் ஆண்டிற்கான என்எம்இடி-யின் ஆண்டறிக்கையை மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், நிலக்கரி, சுரங்கங்கள் துறை இணைமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே ஆகியோர் முன்னிலையில் திரு ஜி கிஷன் ரெட்டி வெளியிட்டார். கனிம ஆய்வில் என்எம்இடி-யின் குறிப்பிடத்தக்க சாதனைகளை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

 

1. தேசிய புவிசார் அறிவியல் தரவு களஞ்சியத்தின் தளத்தை மேம்படுத்துதல்

2. கூட்டு உரிமம் (CL) வைத்திருப்பவர்களுக்கு திருப்பிச் செலுத்தும் உச்சவரம்பை உயர்த்துதல்

3. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கு அதிக ஆதரவு அளித்தல்

4. சிக்கலான, முக்கிய கனிம ஆய்வுக்கான ஊக்கத்தொகை

போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை குறித்து அந்த அறிக்கையில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, தேசிய கனிம மேலாண்மை அமைப்பைப் போன்று சிறு கனிம ஆய்வுப் பணிகளை ஊக்குவிக்க மாநில கனிம ஆய்வு அறக்கட்டளையை அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு மாநிலங்களை வலியுறுத்தினார். இதற்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

 

சுரங்கத் துறையில், செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன், ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.

ஜம்மு காஷ்மீரிலும் பிற கனிம வளம் நிறைந்த பகுதிகளிலும் நடைபெற்று வரும் அனைத்து ஆய்வுத் திட்டங்களையும் விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய நிலக்கரி, சுரங்கத் துறை இணையமைச்சர் திரு. சதீஷ் சந்திர துபே, பல்வேறு கனிம ஆய்வு முகமைகளை ஒன்றிணைத்ததன் மூலம் நாட்டில் கனிம ஆய்வு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றார். சுரங்கத் துறையில் 'தற்சார்பு' நிலையை அடைய, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

*****

 (Release ID: 2044680)

PLM/RR



(Release ID: 2044760) Visitor Counter : 20