இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இன்று சர்வதேச இளைஞர் தினம்: அகமதாபாத் நிகழ்வில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்பு

Posted On: 12 AUG 2024 4:34PM by PIB Chennai

சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி குஜராத் மாநிலம் அகமதாபாதில் இன்று (12.08.2024) நடைபெற்ற 'இளைஞர்களின் தாக்கம் 2024' நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சிறப்புரையாற்றினார். இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்துடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப், யுனிசெப் யுவா, எலிக்சிர் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு, நூற்றுக்கணக்கான ஆர்வமுள்ள இளைஞர்களைக் கவர்ந்தது.

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பை எடுத்துரைத்த டாக்டர் மாண்டவியா, இதற்கு உங்களின் ஆற்றல், புதுமைக் கண்டுபிடிப்பு  அர்ப்பணிப்பு ஆகியவை முக்கியமாகும் என்றார். இளைஞர்கள் நாளைய தலைவர்கள் மட்டுமல்ல, இன்றைய மாற்றத்தை உருவாக்குபவர்கள் என்றும் அவர் கூறினார்.

இந்தியா ஓர் இளையோர் நாடு என்றும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அவர்களின் திறன்களில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது என்றும், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், அவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குவதிலும் எந்த முயற்சியையும் விட்டுவைக்கவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் மாற்றத்தக்க திறன் குறித்து பேசிய டாக்டர் மாண்டவியா, மை பாரத் தளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு இளைஞர்களை வலியுறுத்தினார். மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நாட்டின் எதிர்காலத்தை சீரமைக்க இந்த தளத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வரும் நாட்களில், இளைஞர்களின் அனைத்து தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வாக மை பாரத் செயல்படும் என்று அவர் தெரிவித்தார். "தகவல், தொழில்நுட்ப விண்ணப்பங்கள் அல்லது படிவ சமர்ப்பிப்புகள் எதுவாக இருந்தாலும், இந்தத் தளம் தேசிய நிலையில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் அணுகக்கூடியதாக இருக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

'யுவ சம்வாத்' என்ற சிறப்புப் பிரிவில், டாக்டர் மாண்டவியா இளைஞர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். பல இளம் பங்கேற்பாளர்கள் சவால்களை சமாளித்து தங்கள் சமூகங்களில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்திய எழுச்சியூட்டும் கதைகளைப் பகிர்ந்து கொண்டனர், சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்புகளைச் செய்வதற்கான அவர்களின் திறனையும் உறுதியையும் வெளிப்படுத்தினர்.

பிரதமரின், தாயின் பெயரில் ஒரு மரக்கன்று #Plant4Mother முன்முயற்சியில் இளைஞர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று கூறிய அமைச்சர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீடித்த நடைமுறைகளில் இளைஞர்களின் முக்கிய பங்களிப்பை எடுத்துரைத்தார்.

இந்தியாவுக்கான யுனிசெப் பிரதிநிதியும், யுனிசெப் யுவா வாரியத்தின் இணைத் தலைவருமான திருமதி சிந்தியா மெக்காஃப்ரி, உலகளாவிய நடவடிக்கைகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

சர்வதேச இளையோர் தினம்

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இளைஞர் தினம், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது, இது உலகின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. 'கிளிக்-களிலிருந்து முன்னேற்றத்திற்கு: நீடித்த வளர்ச்சிக்கான இளையோர் டிஜிட்டல் பாதைகள்', என்ற இந்த ஆண்டின் கருப்பொருள், டிஜிட்டல்மயமாக்கல் நமது உலகத்தை எவ்வாறு மாற்றுகிறது, நிலையான வளர்ச்சியை விரைவுபடுத்த முன்னோடியில்லாத வாய்ப்புகளை வழங்குகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மொபைல் சாதனங்கள், சேவைகள், செயற்கை நுண்ணறிவு போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நிலையான வளர்ச்சி இலக்குகளை முன்னெடுப்பதில் கருவியாக உள்ளன.

***

SMB/AG/KV

 


(Release ID: 2044602) Visitor Counter : 71